சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் அரையிறுதி: இலங்கைக்கு 180 ரன்கள் இலக்கு!
விருதுநகர்: கே.டி.ராஜேந்திர பாலாஜி - மா.ஃபா.பாண்டியராஜன் மோதல்; பரபரக்கும் போஸ்டர்கள்!
விருதுநகரில் கடந்த 5-ம் தேதி அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சக கட்சி நிர்வாகி மா.ஃபா.பாண்டியராஜனுக்கு சால்வை அணிவிக்க வந்த தொண்டரை கே.டி.ராஜேந்திர பாலாஜி தாக்கினார். அதைத் தொடர்ந்து, 7-ம் தேதி சிவகாசியில் நடந்த பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கே.டி.ராஜேந்திர பாலாஜி, மா.ஃபா.பாண்டியராஜனை விமர்சித்து கடுமையாகப் பேசியிருந்தார். இந்த பரபரப்பு சம்பவங்களைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக, சில சமுதாய அமைப்பினர் சார்பில், "எங்கள் சமூக, படித்த பண்பாளர்" என மா.ஃபா.பாண்டியராஜனைப் புகழ்ந்து பேசியும், ``நாவை அடக்கிப் பேசு" என்றும் ராஜேந்திர பாலாஜியைக் கண்டித்து... ``நாடார் வாக்குகள் உனக்கும், உன் கட்சிக்கும் வேண்டாமா?" என்று அ.தி.மு.க.வுக்கு மிரட்டல் விடுத்தும் கண்டன போஸ்டர்கள் ஊரெங்கும் ஒட்டப்பட்டது.
இதையடுத்து முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி- மா.ஃபா.பாண்டியராஜன் இடையிலான மோதல் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்குச் சென்றது. இந்த நிலையில் சமீபத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகளுடனான காணொலி காட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “உட்கட்சி விவகாரம் குறித்து பொதுவெளியில் பேசக் கூடாது. தனிப்பட்ட பிரச்னைகளை மனதில் வைத்துக்கொண்டு தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டக் கூடாது. கருத்து வேறுபாடின்றி ஒற்றுமையாகத் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தவேண்டும்.” என பொதுவாக ஆலோசனை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.டி.ராஜேந்திர பாலாஜி, “மா.ஃபா.பாண்டியராஜனுக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை. பொதுவான விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசினேன்.” என அந்தர் பல்டி விளக்கம் அளித்தார். இந்நிலையில், கே.டி.ராஜேந்திர பாலாஜியைக் கண்டித்து விருதுநகரில் ஒட்டப்பட்ட போஸ்டருக்கு பதிலடியாக, மா.ஃபா.பாண்டியராஜனைக் கண்டித்து புதிதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மா.ஃபா.பாண்டியராஜனுக்கு எதிரான அந்த போஸ்டரில், ``போராட்டத்தைத் தூண்டாதே, விருதுநகருக்கு டூரிஸ்ட் போல் வந்து சென்று நேரம் பார்த்து கட்சி தாவும் பாண்டியராஜனே! ஜாதி அரசியலைத் தூண்டாதே!. அதிமுக எம்.ஜி.ஆர். எனும் சிவன் சொத்து. இங்கே ஜாதி அரசியலுக்கு வேலை இல்லை. திருத்திக்கொள்.. இல்லை என்றால் வன்மையாகத் திருத்தப்படுவாய்" என்று ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.