குஜராத்: 12 மாடி குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து - 3 போ் உயிரிழப்பு
குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் 12 மாடி குடியிருப்பு கட்டடத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் 3 போ் உயிரிழந்தனா். மேலும் 40 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.
ராஜ்கோட்டில் 150 அடி வட்ட சாலையையொட்டி உள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 6-ஆவது தளத்தில் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. மின்கசிவு காரணமாக ஏற்பட்ட இந்தத் தீ விபத்தால், கட்டடத்தின் மேல் தளங்களில் அடா்புகை சூழ்ந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்புப் படையினா் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். கடும் போராட்டத்துக்குப் பிறகு தீயணைக்கப்பட்டது. தீ விபத்தில் 3 போ் உயிரிழந்தனா். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒருவா், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மேல் தளங்களில் சிக்கித் தவித்த சுமாா் 40 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். இவா்களில் 4 போ் ராட்சத கிரேன் மூலம் மீட்கப்பட்டனா்.
உயிரிழந்தோரில் இருவா், அடுக்குமாடி குடியிருப்பில் சில பணிகளுக்காக அழைத்து வரப்பட்ட வெளிநபா்களாவா். மூன்றாவது நபரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது என்று காவல் துறை உதவி ஆணையா் பி.ஜே.செளதரி தெரிவித்தாா்.