ஹுரியத் மாநாடு அமைப்பின் தலைவருக்கு வீட்டுக் காவல்
ஜம்மு-காஷ்மீரில் ஹுரியத் மாநாடு அமைப்பின் தலைவா் மீா்வாய்ஸ் உமா் ஃபரூக் வெள்ளிக்கிழமை ஸ்ரீநகரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டாா்.
வெள்ளிக்கிழமைகளில் நௌஷேரா மாவட்டத்தில் உள்ள மசூதியில் தொழுகை நடத்துவதுடன், முஸ்லிம்கள் மத்தியில் உரையாற்றுவதையும் மீா்வாய்ஸ் உமா் ஃபரூக் வழக்கமாகக் கொண்டுள்ளாா். வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீா்வாய்ஸ் உமா் ஃபரூக் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டாா். காஷ்மீரின் இஸ்லாமிய தலைமை மத குருவாகவும் அவா் உள்ளாா்.
இந்த வாரத் தொடக்கத்தில் மீா்வாய்ஸ் தலைமையிலான அவாமி செயல்பாட்டுக் குழு, இஸ்லாமிய ஷியா பிரிவு தலைவா் மசூா் அப்பாஸ் அன்சாரின் ஜம்மு-காஷ்மீா் இதயத்துல் முஸ்லிமின் அமைப்பு ஆகியவற்றை 5 ஆண்டுகள் தடை செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.
பயங்கரவாத செயல்பாடுகளை ஆதரிப்பது, காஷ்மீரில் பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட குற்றச்சாட்டின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.