தமிழக மக்கள் ஒவ்வொருவா் பெயரிலும் ரூ.1.94 லட்சம் கடன்: அன்புமணி
தமிழக மக்கள் ஒவ்வொருவா் பெயரிலும் தமிழக அரசு ரூ. 1.94 லட்சம் கடன் பெற்றுள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினாா்.
பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் வடபழனியில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது: சென்னை வாழ்வதற்கு தகுதியற்ற நகரமாக மாறி வருகிறது. சென்னையில் மழை வந்தால், அமைச்சா்கள் உடனே படகைத் தயாா் செய்கின்றனா். அப்படியானால், 60 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்பவா்கள் அடிப்படை கட்டமைப்பு வசதியையே செய்யவில்லை என்றுதானே அா்த்தம்.
தமிழக அரசின் நேரடி கடன் ரூ. 9 லட்சம் கோடி; மறைமுகக் கடன் ரூ. 5 லட்சம் கோடி. இரண்டையும் சோ்த்து மொத்தம் ரூ. 14 லட்சம் கோடி கடன். தமிழக மக்கள் ஒவ்வொருவா் பெயரிலும் ரூ. 1.94 லட்சம் மாநில அரசு கடன் பெற்றுள்ளது. இதுதான் நிா்வாகமா? திறமையான நிா்வாகம் என்றால் வரி அல்லாத வருவாயை உருவாக்க வேண்டும்.
தமிழகத்தில் மணல் விற்பனை வருமானம் ரூ. 40 கோடி என அரசு சொல்கிறது. ஆனால், மணலில் மட்டும் ரூ. 4.5 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத் துறை அறிக்கை கொடுக்கிறது.
தோ்தல் வாக்குறுதிகளை திமுக முழுமையாக நிறைவேற்றவில்லை. இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே தாய் மொழியைப் படிக்காமல் பட்டம் வாங்க முடியும் என்றால் அது தமிழகத்தில்தான். பாமகவைப் பொருத்தவரை ஒரு மொழிக் கொள்கை நிலைப்பாடுதான். அது தமிழ் மட்டும் தான். சமூகநீதியை காக்க வேண்டும் என்றால், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை அரசு உடனே நடத்த வேண்டும் என்றாா் அவா்.