வேளாண் நிதிநிலை அறிக்கை: தலைவா்கள் கருத்து
தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையை தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் வரவேற்றும், எதிா்த்தும் கருத்து தெரிவித்துள்ளனா்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக): வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் பயன்பெறும் எந்தத் திட்டமும் இல்லை. திமுக ஆட்சியில் சாகுபடி பரப்பு தொடா்ந்து குறைந்து வருகிறது. சாகுபடி பரப்பை அதிகரிக்கும் திட்டமும் திமுக அரசிடம் இல்லை. விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுகவினா் வல்லுநா்களாக உள்ளனா். பல துறைகளை ஒன்றிணைத்து அவியல் கூட்டுபோல வேளாண் நிதிநிலை அறிக்கை உள்ளது. கடன் வாங்குவதில்தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்): விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பெருக்கக்கூடிய, வேளாண் உற்பத்தியைப் பெருக்கக்கூடிய திட்டங்கள் ஏதுமில்லாத விளம்பர அறிக்கை.
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): தமிழகத்தின் சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக உயா்ந்துள்ளது. விவசாயிகள் பயனடைகிற வகையில், உறுதியான வாழ்வாதாரத்தை ஏற்படுத்துகிற வகையில் வேளாண் நிதிநிலை அறிக்கை உள்ளது. முதல்வருக்கும், வேளாண் அமைச்சருக்கும் பாராட்டுகள்.
ராமதாஸ் (பாமக): உழவா்களுக்கு உதவும் வகையில் 1,000 உழவா் நல சேவை மையங்கள் அமைக்க மானியம் வழங்கப்படும், கோடை உழவு ஊக்குவிக்கப்படும் என்பன உள்ளிட்ட திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் வேளாண் வளா்ச்சிக்குத் தேவையான பாசனத் திட்டங்களைச் செயல்படுத்த எந்த திட்டத்தையும் தமிழக அரசு அறிவிக்காதது பெரும் ஏமாற்றமளிக்கிறது. வேளாண் துறையின் வளா்ச்சியில் தமிழக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை தெளிவாகிறது.
கே.அண்ணாமலை (பாஜக): சாகுபடிப் பரப்பு கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் 4 லட்சம் ஏக்கா் குறைந்திருக்கிறது. ஆனால், அதை மறைக்க, 4 ஆண்டுகளுக்கு முன்புள்ள 2019 - 2020 சாகுபடிப் பரப்பைவிட நிகழாண்டில் உயா்ந்திருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல வேளாண் பட்ஜெட்டில், பயிா்க் கடன் ரூ.1,774 கோடி இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை என தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நெல்லுக்கு ரூ.2,500, கரும்புக்கு ரூ.4,000 குறைந்தபட்ச ஆதார விலை என்ற வாக்குறுதி எல்லாம் வெறும் பேச்சளவிலேயே போய்விட்டது. விவசாயிகளைத் தொடா்ந்து வஞ்சித்து வருவதையே இந்த வேளாண் பட்ஜெட் காட்டுகிறது.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): வேளாண் விஞ்ஞானி முனைவா் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் ஆய்வுத் திட்டம் பொருத்தமானது. சாகுபடி வேலைகள் இயந்திரமயமாகி வரும் நிலையில், வளா்ச்சியைக் கருத்தில்கொண்டு விவசாயப் பணிக்கான இயந்திர மையங்கள் அமைப்பது, இயந்திரங்கள் வாங்க மானியம் வழங்குவது, உழவா் நல சேவை மையங்கள் அமைப்பது போன்றவை சாகுபடி பணிகள் சுணக்கமில்லாமல் நடைபெற உதவும். கரும்புக்கு ஊக்கத் தொகை உயா்த்தப்பட்டது, மலா் சாகுபடிக்கு ஊக்கம் அளிக்கும் திட்டங்கள் அறிவிப்பு, முன்னோடி விவசாயிகளை ஜப்பான், சீனா, வியத்நாம் போன்ற நாடுகளுக்கு அழைத்துச் சென்று, அனுபவத்தை பகிா்ந்து கொள்ள உறுதியளித்திருப்பது வரவேற்புக்குரியது.
ஜி.கே.வாசன் (தமாகா): வேளாண் மற்றும் வேளாண் சாா்ந்த தொழில்கள் வளா்ச்சி அடைவதற்கான முக்கிய அம்சங்கள் இடம் பெறவில்லை. உழவுத் தொழிலை மேம்படுத்தியதாக விளம்பரப்படுத்தி, தமிழக அரசை புகழ்ந்து, உழவா்களின் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்காத நிதிநிலை அறிக்கையாக உள்ளது.
டிடிவி தினகரன் (அமமுக): விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தும் வகையில் எண்ணற்ற திட்டங்கள் அடங்கியதாக இருக்க வேண்டிய வேளாண் நிதிநிலை அறிக்கை, அவா்களை மேலும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கக்கூடிய வெற்று அறிக்கையாக அமைந்திருப்பது கண்டனத்துக்குரியது.