காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு!
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் உயா்நிலைக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் உயா்நிலைக் குழுக் கூட்டம் கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் எம்.பி.முருகையன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்க மாநில பொதுச் செயலா் சி.குமாா், தமிழ்நாடு நில அளவை அலுவலா் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஜெ.ராஜா, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்க மாநிலத் தலைவா் ஆா்.திருமலைராஜன், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆா்.பூபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், வருவாய்த் துறையில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும், நிா்வாகத்தால் செயற்கையாக வேலைப்பளு உருவாக்கப்படுவதைக் கைவிட வேண்டும். வருவாய்த் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கிராம உதவியாளா் பணியில் கருணை அடிப்படையில் மீண்டும் நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநிலச் செயலா் பி.செந்தில்குமாா் நன்றி கூறினாா். இதில், பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.