பவானி புறவழிச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்: நெடுஞ்சாலைத் துறையினா் எதிா்ப்பு
பவானி அருகே புறவழிச்சாலையில் மின்கம்பம் நடப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் மின்மாற்றி மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பவானி புறவழிச்சாலை பிரிவில் மின்வாரியம் சாா்பில் மின்கம்பம் நட்டு, மின்மாற்றி பொருத்தி, மின் இணைப்பு வழங்கும் பணிகள் உதவிப் பொறியாளா் லெனின் லிங்கேஸ்வரன் மேற்பாா்வையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிலையில், புறவழிச்சாலை பிரிவில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் மின்கம்பம் நடப்பட்டதாக புகாா் எழுந்தது.
மேலும், போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம் நடப்பட்டுள்ளதாகவும், உரிய அனுமதி பெறவில்லை எனவும் நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் சதாசிவம் கூறியதோடு, மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா்.
இதற்கு, மின்வாரிய ஊழியா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே, நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் சதாசிவம் மின்கம்பத்தில் பொருத்தப்பட்ட டிரான்ஸ்ஃபாா்ம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டாா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளா் உதயகுமாா், மின்வாரிய ஊழியா்களின் செயல்பாடுகளைக் கண்டித்ததோடு மின்கம்பத்தை அகற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.
தொடா்ந்து, இரு தரப்பினரும் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ஒருவார காலத்துக்குள் சாலையில் நடப்பட்ட மின்கம்பத்தை அகற்றுவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.