சென்னை: சொந்த வாகனங்களில் வெளியூர் செல்வோர்கள் கவனத்துக்கு...
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெறுமா?
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஐக்கிய அமீரகத்தின் துபைக்கு மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
பாகிஸ்தானில் ராவல்பிண்டி, கராச்சி, லாகூர் ஆகிய நகரங்களில் உள்ள சர்வதேச மைதானங்களில் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.
பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களுக்காக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்குச் செல்லாதது என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படவுள்ளது. பாகிஸ்தான் - நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதும் தொடரின் முதலாவது போட்டி பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி தொடங்குகிறது.
போட்டி தொடங்குவதற்கு இன்னும் 40 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், பாகிஸ்தானில் உள்ள மைதானங்கள் இன்னும் தயாராகாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கராச்சியில் உள்ள தேசிய மைதானம், ராவல்பிண்டி மற்றும் லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்திலும் கட்டுமான வேலைகள் நடைபெற்று வருகின்றன.
பிப்ரவரி 12 ஆம் தேதிக்குள் இந்த மூன்று மைதானங்களின் வேலையையும் முடித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் ஒப்படைக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட சீரமைப்பு பணிகள் டிசம்பரில் முடிவடைவதாக இருந்தது. இருப்பினும் பணிகள் தாமதமாகி வருகின்றன.
கடந்தாண்டு நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பைக்காக அமெரிக்காவில் தற்காலிக மைதானங்கள் அமைக்கப்பட்டதில் ஐசிசி விரக்தியடைந்தது. பாகிஸ்தானில் மைதான சீரமைப்பு பணிகள் மேலும் கவலையை அதிகரித்துள்ளன.
வீரர்களுக்கான அறைகள், மருத்துவசதி அறைகள், பார்வையாளர்களுக்கான இருக்கை வசதி, வேலி, உயர்ந்த மின்விளக்குகள் ஆகியவை இன்னும் முடிவடையாமல் இருக்கின்றன. மேலும், வேலைகள் தீவிரப்படுத்துவதற்கு வானிலையும் ஒத்துழைக்காமல் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
பாதி தயாரான மைதானத்தை வைத்து விளையாட முடியாது என்றும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குறித்த நேரத்திற்குள் மைதான சீரமைப்பு பணிகளை முடிக்கத் தவறினால் போட்டிகள் அனைத்தும் துபைக்கு மாற்றம் செய்துவது பற்றி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரிகள் முடிவெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.