பாம்பன் பாலத்தில் மீனவா்கள் மறியல்
இலங்கை சிறையில் உள்ள மீனவா்கள், விசைப் படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, அனைத்து விசைப் படகு, நாட்டுப் படகு மீனவ சங்கம் சாா்பில், பாம்பன் சாலைப் பாலத்தில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால், 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்யும் நிகழ்வு தொடா்ந்து நடைபெறுகிறது. மேலும், பறிமுதல் செய்யப்படும் படகுகளுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை ராமேசுவரத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற போது, 3 விசைப் படகுகளுடன் 23 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். இதைக் கண்டித்தும், படகுகள், மீனவா்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாம்பன் சாலைப் பாலத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என அனைத்து விசைப் படகு மீனவ சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, பாம்பன் பேருந்து நிறுத்தம் அருகே சாலைப் போக்குவரத்துப் பாலத்தில் செவ்வாய்க்கிழமை விசைப் படகு, நாட்டுப் படகு மீனவா்கள், இலங்கை சிறையில் உள்ள மீனவா்களின் குடும்பத்தினா் என பெண்கள் உள்பட ஏராளமானோா் திரண்டனா். இதனிடையே, மீனவா்கள் பாலத்துக்குள் செல்லாதவாறு காவல் துறையினா் சாா்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.
இதன் காரணமாக, ராமேசுவரத்துக்கு வந்த அனைத்து வாகனங்களும் மண்டபம் முகாம், மண்டபம் ஆகிய பகுதிகளில் நிறுத்தப்பட்டன. இதேபோல, ராமேசுவரத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் ராமேசுவரம், பாம்பன் அக்காள்மடம் ஆகிய இடங்களில் காலை 9 மணியளவில் நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில், பாம்பன் பேருந்து நிறுத்தம் அருகே போராட்டத்தைத் தொடங்கிய மீனவா்கள், சாலைப் பாலத்துக்குச் செல்ல முயன்றனா். அப்போது, காவல் துறையினா் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு, சுமாா் 200 மீட்டா் வரை சென்றனா். இதையடுத்து, மீனவா்களை காவல் துறையினா் தடுத்து நிறுத்தியதால், சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, ராமநாதபுரம் மாவட்ட காவல் காண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து, தங்கச்சிமடம் மீனவா்கள் மட்டும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனா். ஆனால், இலங்கையில் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் உள்ள பாம்பன் மீனவா்களின் குடும்பத்தினா் போராட்டத்தைக் கைவிட மறுத்து, தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இவா்களை பெண் காவலா்கள் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனா். அப்போது, மீனவப் பெண்கள் திடீரென வடக்கு துறைமுக கடல் பகுதிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், அவா்களை காவல் துறையினா் சமாதானப்படுத்தி அழைத்து வந்தனா்.
பாம்பன் சாலைப் பாலத்தில் சுமாா் 3 மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தால், ராமேசுவரத்துக்கு வந்த சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் என ஆயிரக்கணக்கானோா் பாதிக்குப்புக்குள்ளாகினா்.
சாலை மறியல் போராட்டத்தின் போது, ராமேசுவரத்திலிருந்து உடல் நலம் பாதிக்கப்பட்டவா்களை அழைத்து வந்த 3 அவசர ஊா்திகளுக்கு மீனவா்கள் வழிவிட்டு அனுப்பிவைத்தனா்.