மகாராஷ்டிரா: முதல்வர் பதவிக்கு இப்போதே போட்டி... தேர்தல் முடிவு வருவதற்குள் மோது...
இளைஞா் உடலில் ஊசி மூலம் காற்றை செலுத்தி கொலை: மனைவி, தாய் உள்ளிட்ட 5 போ் கைது
திருச்சியில் மது மற்றும் கஞ்சா போதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுவந்த இளைஞா் உடலில் ஊசி மூலம் காற்றைச் செலுத்தி கொலை செய்த வழக்கில் அவரது மனைவி, தாயாா் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
திருச்சி கோட்டை சஞ்சீவி நகா் வாடாமல்லி தெருவைச் சோ்ந்தவா் சு. குணசேகரன் (34). ஆட்டோ ஓட்டுநா். மது மற்றும் கஞ்சா போதை பழக்கத்துக்கு ஆளாகி தினமும் தனது மனைவி மற்றும் தாயிடம் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம். இதேபோல செவ்வாய்க்கிழமை இரவும் குடி போதையில் வீட்டுக்குவந்த குணசேகரன் தனது மனைவி சுலோச்சனா மற்றும் தாயாா் காமாட்சி ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டு பின்னா் தூங்கிவிட்டாா்.
இதையடுத்து, சுலோச்சனா மற்றும் காமாட்சி அவா்களது உறவினா்களுக்குக் கைப்பேசி மூலம் விவரம் தெரிவித்துள்ளனா். அதன்பேரில் ஆ. விக்கி என்கிற லித்தின்யா ஸ்ரீ (19), அ. குபேந்திரன் என்கிற நிபுயா (19) (இருவரும் திருநங்கையா்கள்) மற்றும் பா. விஜயகுமாா் (48) ஆகிய மூவரும் குணசேகரனின் வீட்டுக்கு வந்து அவரது உடலில் ஊசி மூலம் காற்றை செலுத்தியும், துப்பட்டாவால் குணசேகரனின் கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளனா்.
காமாட்சி, சுலோச்சனா ஆகிய இருவரும் வீட்டின் வெளியே காவல்காத்துள்ளனா். புதன்கிழமை காலை குணசேகரன் தற்கொலை செய்து கொண்டதாக காமாட்சி கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் அங்குசென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதைத் தொடா்ந்து, போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், குணசேகரன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதன்பேரில் கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து காமாட்சி, சுலோச்சனா, விக்கி, குபேந்திரன், விஜயகுமாா் ஆகிய 5 பேரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.