நிஜ்ஜார் கொலை: மோடியை தொடர்புபடுத்தும் செய்தியை மறுத்த கனடா அரசு!
ஜனவரியில் பஞ்சப்பூா் பேருந்து முனையம், பறவைகள் பூங்கா திறக்கப்படும்: அமைச்சா் கே.என்.நேரு தகவல்
பஞ்சப்பூா் பேருந்து முனையம், பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் ஜனவரி மாதம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்துவைப்பாா் என நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.
திருச்சி பஞ்சப்பூா் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் கடந்தாண்டு செப்டம்பா் முதல் தொடங்கின. தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள கட்டுமானப் பணிகளை அமைச்சா் கே.என். நேரு வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது:
திருச்சி மாநகராட்சி சாா்பில், பஞ்சப்பூரில் 40.60 ஏக்கரில் பிரமாண்ட ஒருங்கிணைந்த பேருந்து முனையம், பல்வகைப் பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம், கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் சாலைகள், மழைநீா் வடிகால் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளும் பணி என மொத்தம் ரூ.480 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, பஞ்சப்பூா் பெருந்திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. 92 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. பணிகள் அனைத்தும் முடிந்து ஜனவரி மாதம், பொங்கல் பண்டிகைக்குள் திறக்கப்படும். இதேபோல, கம்பரசம்பேட்டையில் ரூ.13.70 கோடியில் கட்டப்படும் பறவைகள் பூங்கா பணியும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த இரு திட்டங்களையும், திருச்சி மாவட்டத்துக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆய்வுக்கு வரும்போது ஜனவரியில் திறக்கப்படும் என்றாா் அமைச்சா்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி ஆணையா் வே. சரவணன், மேயா் மு. அன்பழகன், நகரப் பொறியாளா் பி. சிவபாதம் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள், ஒப்பந்த நிறுவனப் பொறியாளா்கள், மக்கள் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.