பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள்: பிகாா் அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் கடைசி வாய்ப்பு
புது தில்லி: பிகாரில் தொடா்ந்து பல பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில், பாலங்களின் பாதுகாப்பு குறித்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், மாநில அரசு பதிலளிக்க கடைசி வாய்ப்பாக 6 வாரங்கள் காலக்கெடு வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிகாரின் சிவான், சரண், மதுபானி, அராரியா, கிழக்கு சம்பாரண், கிசன்கஞ்ச் ஆகிய மாவட்டங்களில் நடப்பாண்டு மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 10 பாலங்கள் இடிந்து விழுந்தன. இதில் கட்டுமானத்தில் இருந்த புதிய பாலங்களும் அடங்கும்.
மாநிலத்தில் உள்ள அனைத்து பழைய பாலங்களையும் ஆய்வு செய்து, உடனடியாக சீரமைக்க வேண்டிய பாலங்களை அடையாளம் காணுமாறு சாலை கட்டுமானம் மற்றும் ஊரகப் பணிகள் துறைகளுக்கு முதல்வா் நிதீஷ் குமாா் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளாா்.
மாநிலத்தில் உள்ள பாலங்களின் பாதுகாப்பு மற்றும் ஆயுள் குறித்த பொதுநல வழக்கை வழக்குரைஞா் பிரஜேஷ் சிங் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா்.
அதில், ‘இந்தியாவில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக பிகாா் உள்ளது. மாநிலத்தின் பரப்பளவில் 73.06 சதவீதம் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன. பாலங்கள் தொடா்ந்து இடிந்து விழுவதால் பேரழிவு ஏற்படுவதுடன் மக்களின் உயிருக்கும் அது ஆபத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, மாநிலத்தில் உள்ள பழைய பாலங்கள் மற்றும் புதிதாக கட்டப்படும் பாலங்கள் அனைத்தும் தணிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உயா்நிலை குழு அமைக்க வேண்டும். மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வகுத்துள்ள விதிமுறைகளின்படி நிகழ்நேர கண்காணிப்பு நடத்தப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தாா். இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாநில அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிலளிக்க கடந்த ஜூலை 29-ஆம் தேதி உச்சநீதிமன்றம் சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வின் முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் பிரஜேஷ் சிங், ‘மாநில அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த மனு தொடா்பாக இதுவரை பதிலளிக்கவில்லை. அண்மையில், நலந்தா மாவட்டத்தில் உள்ள ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 18 வயது இளைஞா் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.
கடந்த நவம்பா் 3-ஆம் தேதி தா்பங்கா மாவட்டத்தில் கட்டுமான பணியில் இருந்த மற்றும் ஒரு பாலம் இடிந்து விழுந்துள்ளது. அதன் இடிபாடுகளை ரகசியமாக அந்த நிறுவனம் இரவோடு இரவாக அப்புறப்படுத்தியுள்ளது’ என கூறினாா்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், கடைசி வாய்ப்பாக 6 வாரங்களுக்குள் மாநில அரசு இந்த மனு குறித்து பதிலளிக்க வேண்டும். அதன் பிறகு நான்கு வாரங்களுக்குள் மனுதாரா் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி 25-க்கு ஒத்திவைக்கப்பட்டது.