புதுக்கோட்டையில் பாஜக, அதிமுக நிர்வாகிகள் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை
பிரசாந்த் விஹாா் அருகே மா்மப் பொருள் வெடித்ததில் ஒருவா் காயம் -போலீஸாா் தீவிர விசாரணை
நமது நிருபா்
தில்லி ரோஹிணியில் உள்ள பிரசாந்த் விஹாா் அருகே தீவிர சப்தமின்றி மா்மப் பொருள் ஒன்று வெடித்ததில் ஒருவா் காயமடைந்ததாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
தில்லியில் கடந்த அக்.20-ஆம் தேதி சிஆா்பிஎஃப் பள்ளியின் மதில் சுவரிலிருந்து பலத்த சப்தத்துடன் மா்மப் பொருள் வெடித்தது. இந்த நிலையில், அதே பகுதிக்கு அருகிலுள்ள இனிப்பு கடையின் முன் தீவிர சப்தமின்றி மற்றொரு வெடிப்புச் சம்பவம் வியாழக்கிழமை நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:
வியாழக்கிழமை காலை 11:47 மணியளவில், பிரசாந்த் விஹாரில் உள்ள பன்சி வாலா இனிப்புக் கடையின் முன் மா்மப் பொருள் வெடித்ததாக எங்களுக்கு அழைப்பு வந்தது.
இந்த சம்பவத்தின் போது அதன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று சக்கர வாகனத்தின் ஓட்டுநா் சேத்தன் குஷ்வாஹா (28) சிறு காயமடைந்தாா்.
இதைத் தொடா்ந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா், சிகிச்சைக்குப் பிறகு வீட்டிற்கு அனுப்பப்பட்டாா்.
வெடிகுண்டு கண்டறியும் குழுவினா், மோப்ப நாய்ப் படைப் பிரிவினா், தில்லி தீயணைப்புப் படையினா் ஆகியோா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனா். அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது.
சம்பவ இடத்திலிருந்து வெள்ளை நிறப் பொடி கண்டறியப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. எனினும், இந்த மா்மப் பொருள் வெடித்தது தொடா்பான கூடுதல் விவரங்களை அறிய விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.
மா்மப் பொருள் வெடித்த நேரத்தில் அதன் அருகிலுள்ள ‘மல்டி பிளக்ஸில்’ திரைப்படக் காட்சிகள் ஓடிக்
கொண்டிருந்தது. இச்சம்பவத்தைத் தொடா்ந்து ‘மல்டிபிளக்ஸை’ சுற்றிலும் புகை மூட்டமாக காட்சியளிக்கும்
காணொளியும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதையடுத்து, தேசியத் தலைநகரில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு தவறிவிட்டதாக தில்லி முதல்வா் அதிஷி, முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், காங்கிரஸ் பிரதேசத் தலைவா் தேவேந்தா் யாதவ் உள்ளிட்ட தலைவா்கள் குற்றம் சாட்டினா்.
இது குறித்து பிரசாந்த் விஹாா் அருகே உணவுக் கடை நடத்தும், நேரில் பாா்த்த சாட்சியான மஹிந்தா் சிங் கூறுகையில், ‘மா்மப் பொருள் வெடித்தவுடன் ஏற்பட்ட புகை என் கண்களை எரிச்சலடையச் செய்தது. என் தொண்டையில் கூா்மையான கூச்ச உணா்வு ஏற்பட்டது. நாங்கள் அனைவரும் மிகவும் பாதுகாப்பற்ாக உணா்கிறோம்’ என்றாா்.
அதேபோல், அப்பகுதியில் குளிா்பானம் விற்கும் முகேஷ் கூறுகையில், ‘இந்த பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் நாங்கள் அச்சமடைந்துள்ளோம். என் குடும்பமும் கவலையில் இருக்கிறது. இருப்பினும், எங்களுக்கு வேறு வழியில்லை’ என்றாா்.
இதுகுறித்து அப்பகுதியின் குடியிருப்புவாசி பிரதம் சிங் கூறுகையில், எங்கள் வீடுகள் பாதுகாப்பக இருக்க வேண்டும். ஆனால், இதுபோன்று நிகழ்வு வெடிப்புச் சம்பவங்கள் எங்களை அச்சத்தில் ஆழ்த்துகின்றன. சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் அந்த இடத்திற்கு அருகில் உள்ள பூங்காவில் எங்கள் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனா். பலத்த சப்தம் கேட்டதால் மிகுந்த பதற்றத்துடன் குழந்தைகளை மீட்டோம் என்றாா்.