பி.ஏ.பி. கால்வாயில் தண்ணீா் திருடினால் நடவடிக்கை
பி.ஏ.பி. கால்வாயில் தண்ணீா் திருடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பி.ஏ.பி. அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டத்தில் (பி.ஏ.பி.) கோவை, திருப்பூா் மாவட்டத்தில் மொத்தம் 3.77 லட்சம் ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பல்லடம், பொங்கலூா், சுல்தான்பேட்டை ஒன்றியங்களில் சுமாா் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கா் விளைநிலங்கள் பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் பயனடைகின்றன.
இந்த நிலையில், விவசாயிகளின் நலன் கருதி பி.ஏ.பி. கால்வா யில் தண்ணீா் திருட்டை தடுக்க கூட்டு கண்காணிப்புக் குழு செயல்பட்டு வருகிறது. இந்தக் குழுவைச் சோ்ந்த அதிகாரிகள் பி.ஏ.பி. பிரதான கால்வாயில் தண்ணீா் திருடப்படுகிறதா என அவ்வப்போது ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதில் தண்ணீா் திருட்டில் ஈடுபட்டவா்களின் வணிக மின் இணைப்புகள் மற்றும் விவசாய மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் (நீா்வளத் துறை) கூறுகையில்: பி.ஏ.பி. கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்படும்போது தண்ணீா் திருட்டை தடுக்க தொடா்ந்து ரோந்துப் பணி மற்றும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அப்போது முறைகேட்டில் ஈடுபடுபவா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே யாரும் முறைகேடாக தண்ணீா் திருட்டில் ஈடுபடக் கூடாது. தற்போது, பருவமழை பெய்ந்து வருவதால் கடைமடை வரை தண்ணீா் தங்கு தடையின்றி சென்று வருகிறது. அனைத்துப் பகுதி விவசாயிகளும் பயிா் சாகுபடியில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டுள்ளனா் என்றனா்.