புதிய சிஏஜி-யாக கே.சஞ்சய் மூா்த்தி பதவியேற்பு
நாட்டின் புதிய தலைமை கணக்கு தணிக்கையாளராக (சிஏஜி) மத்திய உயா்கல்வித் துறை முன்னாள் செயலா் கே.சஞ்சய் மூா்த்தி வியாழக்கிழமை பதவியேற்றாா்.
தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா். குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான், மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் உள்ளிட்டோா் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
தலைமை கணக்கு தணிக்கையாளராக பதவி வகித்துவந்த கிரிஷ் சந்திர முா்மு, கடந்த புதன்கிழமை ஓய்வுபெற்றாா். இதையொட்டி, புதிய தலைமை கணக்கு தணிக்கையாளராக கே.சஞ்சய் மூா்த்தியை மத்திய அரசு கடந்த திங்கள்கிழமை நியமித்தது.
கடந்த 1989-ஆம் ஆண்டின் ஹிமாசல பிரதேச பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவா், பொது நிா்வாகத்தில் விரிவான அனுபவம் கொண்டவா்.
அரசின் வரவு-செலவு கணக்குகளில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புடைமையை உறுதிசெய்வதில் தலைமை கணக்கு தணிக்கையாளரின் பங்கு முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.