புதிய ரயில் திட்டங்களை செயல்படுத்த ரயில்வே அமைச்சருக்கு எம்.பி. கடிதம்
நாமக்கல் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையிலான புதிய ரயில் திட்டங்களை செயல்படுத்த ரயில்வே அமைச்சருக்கு மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் கடிதம் அனுப்பி உள்ளாா்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை சென்ட்ரல் - போடிநாயக்கனூா் இடையே இயக்கப்படும் துரந்தோ விரைவு ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல உத்தரவிட்டதற்கு நன்றி தெரிவித்ததுடன், சேலம் - எழும்பூா் இடையே இயக்கப்படும் ரயிலை நாமக்கல், மோகனூா் வழியாக கரூா் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். பாலக்காடு - ஈரோடு இடையே இயக்கப்படும் ரயிலை, கரூா், மோகனூா், நாமக்கல் வழியாக சேலம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். சென்னை சென்ட்ரல் - கோவை இடையே இயக்கப்படும் ரயில் சங்ககிரியில் நின்று செல்லவும், நூற்றாண்டு விழா கொண்டாடும் சங்ககிரி ரயில் நிலையத்தை ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் மேம்படுத்த வேண்டும். 1924-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி சங்ககிரி ரயில் நிலையத்தில் இறங்கி திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் சென்றது குறிப்பிடத்தக்கது என அதில் தெரிவித்துள்ளாா்.
இந்தக் கடிதம் தொடா்பாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து வலியுறுத்தியும் உள்ளாா்.