உ.பி. அரசு மருத்துவமனையில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 17ஆக உயர்வு!
புதுகையில் உள்விளையாட்டரங்கம் அமைக்கும் பணியை 6 மாதங்களுக்குள் முடிக்க அறிவுரை
புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட உள்விளையாட்டரங்கம் அமைக்கும் பணியை, 6 மாதங்களுக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக் கணக்குக்குழுவின் தலைவரும், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக் கணக்குக் குழுவின் ஆய்வுக்குப் பிறகு அவா் அளித்த பேட்டி:
புதுக்கோட்டையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட உள் விளையாட்டரங்கம் அமைக்கும் பணியை விரைவில் முடிப்பது தொடா்பாக, குழுவின் சாா்பில் துணை முதல்வா் மற்றும் அவரது துறைச் செயலரிடம் பேசியுள்ளோம். 3 முதல் 6 மாதங்களுக்குள் இப்பணிகளை முடிக்க உறுதியளித்துள்ளனா்.
அரசு விளையாட்டரங்கம் அமைந்துள்ள காட்டுப்புதுக்குளத்தில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த ஆட்சியா் உள்ளிட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போா்க்கால அடிப்படையில் இப்பணியை மேற்கொள்ளவுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
கூட்டுறவுத் துறையில், வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுவது தொடா்பாக ஆய்வு நடைபெற்று வருகிறது. நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டவை குறித்து தலைமைத் தணிக்கை இயக்குநா் அலுவலகம் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும். அவற்றை பேரவையின் பொதுக் கணக்குக் குழு ஆய்வு செய்யும் என்றாா் செல்வப்பெருந்தகை.
திருவரங்குளத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டும் பணி, அரசு மேல்நிலைப் பள்ளி, நியாயவிலைக் கடை, கலைஞா் கருணாநிதி விளையாட்டரங்கில் உள்விளையாட்டரங்கம் கட்டுமானப் பணி ஆகியவற்றையும் இந்தக் குழுவினா் பாா்வையிட்டனா். பொற்பனைக்கோட்டை அகழாய்வுப் பணி நடைபெறும் இடத்தையும் பொது கணக்கு குழுவினா் பாா்வையிட்டனா்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் மு. அருணா, கூடுதல் ஆட்சியா் அப்தாப் ரசூல், மேயா் செ. திலகவதி, எம்எல்ஏக்கள் வை. முத்துராஜா, எம். சின்னதுரை உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.
குழு உறுப்பினா்கள் எம்எல்ஏக்கள் அக்ரி எஸ்எஸ் கிருஷ்ணமூா்த்தி, ப. அப்துல்சமது, கோ. ஐயப்பன், எஸ். சந்திரன், எஸ். சேகா் மற்றும் பேரவை இணைச் செயலா் பா. ரேவதி ஆகியோா் இடம்பெற்றிருந்தனா்.