பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! எந்தெந்த மாவட்டங்களில்?
புதுச்சேரி: `பள்ளியை இடித்துவிட்டு ரெஸ்டோ பார் கட்டுகிறோமா?’ - காங்கிரஸ் புகாருக்கு சபாநாயகர் பதில்
புதுச்சேரி சபாநாயகர் செல்வம் சட்டப்பேரவையிலுள்ள தனது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``என்னுடைய தொகுதியான மணவெளி சின்ன வீராம்பட்டினத்தில் இருக்கும் அரசு ஆரம்பப் பள்ளி கட்டடம் சேதமடைந்திருக்கிறது. அதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் என்னை சந்தித்து பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித்தரும்படி கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் அந்த பள்ளியை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தேன். கடந்த 14.9.2024 அன்று கல்வித்துறை அது குறித்து சுற்றறிக்கை வெளியிட்டது. அந்த சுற்றறிக்கையில், புதிய கட்டடம் கட்டிய பிறகு மீண்டும் பள்ளி அங்கு இடமாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இரண்டு முறை முதலமைச்சராகவும், அமைச்சராகவும் பதவி வகித்து தற்போது எம்.பி-யாகவும் பொறுப்புமிக்க பதவியில் உள்ள வைத்திலிங்கம், பள்ளிக் கட்டடத்தை இடித்துவிட்டு, அங்கு ரெஸ்டோ பார் அமைக்க அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அவரது குற்றாச்சாட்டை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பொறுப்புமிக்க பதவியில் உள்ளவர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து பேச வேண்டும். அதைவிடுத்து யாரோ சொன்ன தகவல்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு பேசக் கூடாது. அரசு கட்டடத்தில் ரெஸ்டோ பார் அமைக்க முடியுமா என்பதை அவர்தான் விளக்க வேண்டும். கடந்த 30-ம் தேதி ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்டது. சாத்தனூர் மற்றும் வீடூர் அணைகள் திறக்கப்பட்டதால், ஆற்றின் கரையோரம் இருக்கும் கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.
அவற்றை மத்தியக்குழு பார்வையிட்டு சேத மதிப்பை கணக்கிட வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். அதனை ஏற்றுக் கொண்ட மத்திய அரசும் உடனடியாக ஆய்வுக் குழுவை அனுப்பியிருக்கிறது. அவர்கள் விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். இதனிடையே புயலில் பாதித்த மக்களை கவர்னர், முதலமைச்சர், அமைச்சர்கள் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் உரிய நிவாரணம் அறிவித்துள்ளார். அந்த நிவாரணத்தில் முதல்கட்டமாக அனைத்து ரேஷன் கார்டுக்கும் ரூ.5,000/- பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புயல் நிவாரணம் வழங்காத நிலையில், புதுவையில் நிவாரணத்தை வழங்கியிருக்கிறோம். புதுவையை தாக்கிய புயல் பாதிப்பு குறித்து எம்.பி வைத்திலிங்கம் நாடாளுமன்றத்தில் பேசியது என்ன ?
புதுவை அரசு அதிகாரிகள் சேத மதிப்பு குறித்த அறிக்கை தயாரிக்க காலதாமதம் ஆகிவிட்டது. அதனால்தான் முதல்கட்ட நிவாரணம் உடனடியாக கிடைக்கவில்லை. புதுச்சேரியில் இருக்கும் அரசு அதிகாரிகள் தொடர்ந்து மெத்தனப்போக்குடன் செயல்படுகின்றனர். ஒரு சில அதிகாரிகள் தங்களை மாற்றிக் கொண்டாலும், மற்றவர்கள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றனர். முதலமைச்சர் கருணையோடு அவர்களை மன்னித்து வருகிறார். அமைச்சரவை அனுப்பும் கோப்புகளின் மீது ஒருவாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னர் ஆணை பிறப்பித்துள்ளார். ஆனாலும், அதிகாரிகள் காலதாமதம் செய்கின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம். அதனால் அதிகாரிகள் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.