திண்டுக்கல்: தனியார் மருத்துவமனையில் 'தீ' விபத்து - சிறுவன் உட்பட 6 பேர் பலியான ...
Dhoni: `அன்று தோனி ஒரு வார்த்தை கூட பேசவில்லை' - RPS கேப்டன் பதவி நீக்கம் குறித்து சஞ்சீவ் கோயங்கா
2017-ம் ஆண்டு ஐ.பி.எல் சீசனில் தோனியை ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் கேப்டன்சியிலிருந்து நீக்கி ஸ்டீவ் ஸ்மித் தான் சிறந்தவர் என்று பாராட்டியவரும், தற்போது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளருமான சஞ்சீவ் கோயங்கா, தோனிக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார்.
2016 ஐ.பி.எல் சீசனுக்கு முன்பாக, சூதாட்ட சர்ச்சையில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. அப்போது, 2016, 2017 ஆண்டுகளுக்கு குஜராத் லயன்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிகள் அறிமுகம் செய்யப்பட்டது. இதில், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு தோனி கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.
2016 சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த அணி புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தைப் பிடித்தது. அடுத்த சீசனிலேயே, அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, தோனியை கேப்டன்சியிலிருந்து நீக்கி ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக நியமித்ததோடல்லாமல், தோனியை விட சிறந்தவர் ஸ்மித் என்று கூறி ரசிகர்களிடமிருந்து கடும் விமர்சனங்களையும் சம்பாதித்தார்.
அதே கோயங்கா 7 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு ஐ.பி.எல்லில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல். ராகுலை போட்டிக்குப் பிறகு மைதானத்திலேயே கடுமையாகப் பேசிய வீடியோ வைரலானது. அதைத்தொடர்ந்து, பின்னர், கடந்த மாதம் நடந்து முடிந்த ஐ.பி.எல் மெகா ஏலத்துக்கு முன்பாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட கே.எல். ராகுல் டெல்லி அணிக்கு ஏலத்தில் சென்றார்.
இந்த நிலையில், ரன்வீர் அலபாடியாவின் யூடியூப் சேனல் நேர்காணல் ஒன்றில், தோனியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது பற்றி பேசியிருக்கும் கோயங்கா, ``அன்று தோனி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இரண்டு நபர்களுக்குள் பேசி இரண்டு நபர்களே எடுத்துக்கொண்ட முடிவு. இதுவொரு தனிப்பட்ட உறவு. இதில் முக்கியமானதென்னவென்றால் இந்த உறவு இன்றும் நன்றாக இருக்கிறது. தோனி போன்ற ஒரு தலைவரை நான் இதுவரைப் பார்த்ததில்லை.
அவர் வயதில் ஒருவர் தன்னை எப்படி புதுப்பித்துக்கொள்ள முடியும். பத்திரானாவைப் பாருங்கள். அவர் ஒரு இளம் பந்துவீச்சாளர், அவரை ஒரு மேட்ச் வின்னராக தோனி உருவாக்கியிருக்கிறார். தன்னுடைய வீரர்களை எப்போது பயன்படுத்தவேண்டும் என்று அவருக்குத் தெரியும். அவருடன் பழகும்போதெல்லாம், ஏதாவது ஒன்றை நான் கற்றுக்கொள்கிறேன். ஐந்தாறு வருடங்களுக்கு முன் தோனி என் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது, என் பேரனிடம் எவ்வாறு கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று கற்றுக் கொடுத்துக்கொண்டிருந்தார்.
அவரிடம் என் பேரன் தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார். `அவரை இப்போது விடு' என்று பேரனிடம் கூறினேன். அப்போது, `விடுங்கள், இந்த உரையாடலை நான் மகிழ்ச்சியாக அனுபவிக்கிறேன்.' என்று தோனி கூறினார். அரை மணிநேரம் உரையாடினார். அவரின் இந்த குணம், மற்றவர்களிடம் எப்படிப் பேச வேண்டும் என்று கற்றுக்கொள்ள வைக்கிறது. அதனால் தான் அவர் தோனி. அவர் லக்னோவுக்கெதிராக விளையாடும் போதெல்லாம், மைதானம் முழுவதும் மஞ்சள் நிறத்தால் நிரம்பியிருக்கும்." என்று கூறினார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...