செய்திகள் :

Vinod Kambli : சச்சின் - காம்ப்ளி சந்திப்பு தரும் வலியும்; மாபெரும் திறமையாளன் சரிந்த கதையும்

post image
தன்னுடைய பால்ய நண்பனான வினோத் காம்ப்ளியை சச்சின் டெண்டுல்கர் சந்தித்த புகைப்படம்தான் இணையத்தின் சமீபத்திய வைரல்.

சச்சினைக் கண்டவுடன் வாஞ்சையோடு எழுந்தரிக்க முயன்று முடியாமல் தடுமாறிய காம்ப்ளியை பார்க்கும்போது சச்சினுக்கு மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அத்தனை பேருக்குமே மனம் கனத்துப் போயிருக்கும். சச்சினைப்போல பல தலைமுறைகளைக் கட்டி ஆண்டிருக்க வேண்டிய மாபெரும் திறமையாளன், அவரின் தகுதிக்கு ஏற்ற உயரத்தில் சிறிதளவைக்கூட எட்டவில்லை என்கிற ஆதங்கம் இன்னும் இருக்கவே செய்கிறது.

சச்சினைப் போலவே மும்பையின் பள்ளி மைதானங்களில் கிரிக்கெட் ஆடிப் பழகியவர்தான் வினோத் காம்ப்ளியும். ரமாகாந்த் ஆச்ரேக்கர் எனும் தங்களின் பள்ளி காலப் பயிற்சியாளரின் நினைவாக நடத்தப்பட்ட சிலை திறப்பு விழாவில்தான் சச்சினும் காம்ப்ளியும் சமீபத்தில் சந்தித்திருந்தனர். சச்சினும் காம்ப்ளியும் நெருங்கிய நண்பர்கள் ஆவதற்கு முழுமுதற் காரணம் ரமாகாந்த் தான். அவர்தான் எளிய குடும்பத்தைச் சேர்ந்த வினோத் காம்ப்ளியின் கிரிக்கெட் ஆடும் திறனை அறிந்து சாரதாஸ்ரமம் எனும் கிரிக்கெட் பயிற்சிக்குப் பெயர்போன பள்ளிக்கு அழைத்து வருகிறார். அங்கேதான் சச்சினும் காம்ப்ளியும் நண்பர்களாகிறார்கள். இந்திய அணிக்கு ஆடவேண்டும், கிரிக்கெட்டில் உச்சம் தொடவேண்டும் என்கிற கனவுகளின் வழி கைகோத்து இருவரும் பள்ளி அளவிலான போட்டிகளில் கலக்குகின்றனர்.

செயின்ட் சேவியர்ஸ் பள்ளிக்கு எதிரான போட்டி ஒன்றில் இருவரும் கூட்டாக இணைந்து 664 ரன்களைச் சேர்த்திருந்தனர். காம்ப்ளி மட்டும் இதில் 349 ரன்களை அடித்திருந்தார். சச்சினுக்கு நிகரான திறமை கொண்டவராகவே காம்ப்ளி மதிப்பிடப்பட்டார். ஆனாலும் காம்ப்ளிக்கு முன்பாகவே சச்சினுக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. சச்சின் 16 வயதில் இந்திய அணிக்கு அறிமுகமானார். காம்ப்ளி 19 வயதில் இந்திய அணிக்கு அறிமுகமானார். 'சச்சின் லிப்டை பிடித்து வேகமாக முன்னேறிவிட்டார். நான் படிக்கட்டுகளில் போராடி ஏறி முன்னேறினேன்.' என காம்ப்ளியே பின் நாட்களில் தன்னுடைய ஆரம்பகால கரியரைப் பற்றி கூறுவார்.

ரமாகாந்த் ஆச்ரேக்கர் தன்னுடய மாணவர்களுக்கு கிரிக்கெட்டை வெறும் திறனாக மட்டும் கற்றுக்கொடுக்கவில்லை. கிரிக்கெட்டை மதிக்கவும், ஒரு தனிப்பட்ட வீரரின் ஈகோவுக்கு மேலானது கிரிக்கெட் எனும் பக்குவத்தையும் சேர்த்துதான் ரமாகாந்த் பயிற்றுவித்தார். நெட் ப்ராக்டீஸூக்கான வலைகளை கட்டுவது, மைதானத்தை செப்பனிடுவது, சுத்தம் செய்வது என அத்தனையையும் மாணவர்கள் செய்ய வேண்டும். பயிற்சியாளருக்கு கொடுக்கும் மரியாதையை கிரிக்கெட் பேட்டுக்கும் பந்துக்கும் கொடுக்க வேண்டும். அவற்றை ஏனோதானோவென கையாளக் கூடாது. இவையெல்லாம் ரமாகாந்த் பள்ளியின் பாலபாடங்கள். மாணவர்களை குதிரைக்கு கடிவாளம் கட்டியதை போல ஒழுங்கு செய்யவே இப்படியெல்லாம் செய்தார். சச்சினால் இதையெல்லாம் எளிதில் உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. ரமாகாந்த்தின் பயிற்சியின் உள்ளர்த்தங்களை உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆனால், காம்ப்ளியால் அப்படி செய்ய முடியவில்லை. அதன் விளைவுதான் அசாத்திய திறமையிருந்தும் காம்ப்ளி ஓரங்கட்டப்பட்டார்.

காம்ப்ளியின் சில சாதனைகளை இன்றைக்குக் கேட்டாலும் மலைப்பாகவே இருக்கும். 1988-89 சீசனில் மும்பை அணிக்காக ரஞ்சி போட்டியில் அறிமுகமாகிறார். அறிமுகமென்றால் சாதாரண அறிமுகமில்லை. செய்தித்தாள்களின் விளையாட்டுப் பக்கங்களில் நாயகனாக நிற்கும் அளவுக்கான அறிமுகம். அறிமுகப் போட்டியில் எதிர்கொண்ட முதல் பந்தையே சிக்சருக்கு பறக்கவிடுகிறார். நான் ஸ்ட்ரைக்கர் ரன் ஓட முயன்றும் அது எப்படியும் சிக்சர்தான் போகுமென தெரிந்து நம்பிக்கையோடு ரன் ஓட மறுக்கிறார். அந்த இன்னிங்ஸில் மட்டும் 65 பந்துகளில் 72 ரன்களை எடுத்திருந்தார்.

வினோத் காம்ப்ளி

அடுத்த சீசனில் 8 போட்டிகளில் 4 சதங்களை அடித்து இந்திய அணிக்கும் அறிமுகமானார். முதலில் ஓடிஐ போட்டிகளுக்குத்தான் அறிமுகமானார். பெரிதாக சோபிக்கவில்லை. அணியிலிருந்து நீக்கப்படுகிறார். மீண்டும் ரஞ்சியில் வந்து சக்கைப் போடு போடுகிறார். 1993 இல் மீண்டும் இந்திய அணியிலிருந்து அழைப்பு வருகிறது. இந்த முறை வெள்ளை உடை தரித்து அவர் ஆடியது ருத்ரதாண்டவம். ஆடிய 5 இன்னிங்ஸ்களில் 2 இன்னிங்ஸ்களில் இரட்டைச்சதம், 2 இன்னிங்ஸ்களில் சதம். இங்கிலாந்து, ஜிம்பாப்வே, இலங்கை என பாரபட்சமில்லாமல் அடித்தார். ஸ்பின்னர்களை லாவகமாக எதிர்கொண்டார். அந்த ஆண்டில் மட்டும் அவரின் ஆவரேஜ் 100 ஐ கடந்தது. மொத்தமாக 17 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் அவரின் ஆவரேஜ் 54 ஐ சுற்றி இருக்கிறது. இந்திய வீரர்களில் ஆகச்சிறந்த ஆவரேஜ் காம்ப்ளியுடையதுதான்.

ரமாகாந்த் எப்போதுமே தன்னுடைய மாணவர்கள் நின்று பெரிய இன்னிங்ஸை ஆட வேண்டும் என்றே நினைப்பார். 150 ரன்களை எடுத்திருந்தாலும் அதை ஏன் 200 ஆக மாற்றவில்லை என்றே அதட்டுவார். இதுவே அவருடைய மாணவர்களுக்கு High Scoring வேட்கையையும் பெரிய இன்னிங்ஸ் ஆடுவதற்கான மனத்திடத்தையும் கொடுத்தது. ஆனாலும் சச்சின் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் இரட்டைச் சதத்தை 1999 இல் தான் அடித்திருந்தார். எனில், தனது அறிமுக ஆண்டிலேயே இரட்டைச் சதங்களை அடித்து குவித்த காம்ப்ளியின் மேதமை எத்தகையது என்பதை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்.

சச்சின், வினோத் காம்ப்ளி

'சச்சினையும் காம்ப்ளியையும் சம அளவிலான திறமை கொண்டவர்கள் என்றே மதிப்பிடுவேன். ஆனால், சச்சினிடம் தன்னுடைய தவறுகளை உணர்ந்து அதை திருத்திக் கொள்ளும் குணம் இருந்தது. காம்ப்ளியிடம் அந்தத் தன்மை இல்லை.' என ரமாகாந்த் ஒரு பேட்டியில் கூறியிருப்பார். இது 100% உண்மை. திறமை மட்டுமே உச்சத்தை எட்ட போதாது. அதைத்தாண்டி நடவடிகைகளில் ஒரு ஒழுங்கு தேவைப்படுகிறது. டிராவிட் சொல்வதைப் போல திறமை என்பதை பந்தை எதிர்கொள்ளும் விதத்தை வைத்து மட்டுமே மதிப்பிட முடியாது. திறமை என்பது பல கூறுகளை உள்ளடக்கிய அம்சமே.

இதில்தான் வினோத் காம்ப்ளி தவறினார். இளம் வயதிலேயே அவருக்கு கிடைத்த பெரும் புகழை அவரால் சரியாகக் கையாள முடியவில்லை. குடிபோதைக்கு அடிமையாகினார். அதன்வழி அணிக்குள் நிறைய சச்சரவுகள் வரத் தொடங்கியது. மைதானத்துக்கு வெளியேயும் அவர் சார்ந்து நிறைய சர்ச்சைகள் வர தொடங்கியது. அதிகமாக ஆவேசப்பட்டார். ஒரு கட்டற்ற நிலைக்கு வினோத் காம்ப்ளி சென்றார். கூடவே சேர்ந்து வெளிநாடுகளில் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதிலும் திணறினார். இதெல்லாம் சேர்த்து காம்ப்ளியை மொத்தமாக அணியை விட்டு வெளியேற்றியது. 'பிசிசிஐ என்னை சாதிரீதியாகவும் நிறரீதியாகவும் பேதம் பார்த்து ஒதுக்கியது.' என வினோத் காம்ப்ளி தன் தரப்பு வாதத்தையும் சில இடங்களில் முன் வைத்திருக்கிறார். அவரின் கரங்களுக்கு வலு சேர்க்கும் வகையிலான ஆதரவு அவருக்கு கிடைக்கவில்லை.

வினோத் காம்ப்ளி

சினிமா, சின்னத்திரை, அரசியல் எனப் பல இடங்களில் கால்பதித்தார். ஆனால், எதிலுமே அவரால் வெற்றிகொள்ள முடியவில்லை. கட்டற்ற வாழ்வின் வழியாக நிறைய உடல் உபாதைகளையும் எதிர்கொண்டார். 2013 லேயே நெஞ்சு வலி ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இப்போதும் பல உபாதைகளால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறார். சச்சினும் காம்ப்ளியும் சந்தித்துக் கொண்ட அந்த புகைப்படமே ஒரு உருவகம் போலத்தான் இருக்கிறது. கம்பீரமாக எழுந்து நிற்க வெறும் திறமை மட்டுமே போதாது. நம் ஒவ்வொருவருக்குமான செய்தியுமே கூட இதில் அடங்கியிருக்கிறது.

CT: `BCCI-க்கு முன் பாகிஸ்தான் இந்த `முடிவு' எடுக்க வேண்டும்' - முன்னாள் கேப்டன் அறிவுரை

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு பிப்ரவரியில் பாகிஸ்தானில் நடைபெறவிருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் சூழலில், தாங்கள் அங்கு செல்ல மட்டோம் என்பதில் இந்திய அணி உறுதியாக இருப்பத... மேலும் பார்க்க

Joe Root: இன்னும் 493 ரன்களில் பாண்டிங் இடம் காலி; அடுத்து சச்சின் தான்... தனி ரூட்டில் ஜோ ரூட்!

கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளிலும் சரி, ஒருநாள் போட்டிகளிலும் சரி அதிக ரன்களைக் குவித்தவர்கள் பட்டியலில் மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரே முதலிடத்தில் இருக்கிறார். இந்தச் சாதனையை இந்த வீர... மேலும் பார்க்க

Mohammed Siraj Vs Travis Head : களத்தில் ஏற்பட்ட மோதல்; `இருவருக்கும் அபராதம்' - விளக்கமளித்த ICC

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ட்ராவிஸ் ஹெட்டுக்கு அபராதம் விதித்துள்ளது. பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் போட்டியில் இருவருக்க... மேலும் பார்க்க

``அடுத்த முறை Dr. வெங்கடேஷாக இருப்பேன்"- கல்வி குறித்துப் பேசிய வெங்கடேஷ் ஐயர்

2021ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ. 23.75 கோடிக்கு கேகேஆர் அணியால் வாங்கப்பட்டார். கட... மேலும் பார்க்க

U19 Asia Cup: பைனலில் திணறிய இந்திய அணி; வெற்றி வாகை சூடிய வங்கதேச இளம் படை

துபாயில், 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசியக் கோப்பைத் தொடர் இறுதிப் போட்டியில் (U19 Asia Cup Final), இந்திய அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியிருக்கிறது வங்கதேச அணி.அரையிறுதிப் போட்டிகளில், இலங்கையை ... மேலும் பார்க்க

AUS vs IND: "சிராஜ் எப்போதும் சண்டை போடுவதை விரும்புவார்" - சிராஜ், ஹெட் விவகாரம் குறித்து ரோஹித்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.இந்த தோல்வி இந்திய அணிக்கு நிறையச் சிக்கல்களை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், நேற்று (டிசம்... மேலும் பார்க்க