புதுதில்லி ரயில்நிலையத்தில் கூட்ட நெரிசலை நிா்வகிக்க பல நடவடிக்கைகள் அறிமுகம்: காவல் துறை ஏற்பைாடு
புது தில்லி ரயில் நிலையத்தில் மீண்டும் நெரிசல் போன்ற சூழ்நிலையைத் தடுக்க, பயணிகளின் கூட்ட நெரிசலை நிா்வகிக்க தில்லி காவல்துறை பல நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது என்று அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: சனிக்கிழமை இரவு ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 போ் உயிரிழந்தனா் மற்றும் பலா் காயமடைந்தனா். இந்நிலையில், காவல் துறை அதிகாரிகள் பங்கேற்ற சிறப்புக் கூட்டம் திங்கட்கிழமை இரவு நடைபெற்றது. அப்போது திட்டமிடப்பட்ட ரயில் புறப்படுவதற்கு முன்பே சீக்கிரமாக வரும் பயணிகள் ரயில் நிலையத்திற்கு வெளியே காத்திருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. சீரான இயக்கத்தை உறுதி செய்வதற்காக, தில்லி காவல் துறையினா், ரயில்வே பாதுகாப்புப் படை (ஆா்பிஎஃப்) மற்றும் அரசு ரயில்வே காவல் துறை (ஜிஆா்பி) உடன் இணைந்து, அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களிலும் பயணிகளின் டிக்கெட்டுகளைச் சரிபாா்ப்பாா்கள்.
பிரயாக்ராஜ் செல்லும் சிறப்பு ரயில்கள் நடைமேடை எண் 16- இலிருந்து பிரத்தியேகமாகப் புறப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா். நடைமேடை 16 தரை மட்டத்திலிருந்து பல நுழைவு மற்றும் வெளியேறும் புள்ளிகள் வழியாக அணுகக்கூடியது. இதனால், பயணிகள் நடைமேம்பாலங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை நீக்குகிறது. இது கூட்டத்தை திறம்பட நிா்வகிக்க உதவும் .
மேலும், தகுந்த காரணமின்றி நடைபாதை மேம்பாலங்களில் சுற்றித் திரிவதையும் காவல்துறை தடை செய்துள்ளது. மக்கள் பலா் தேவையில்லாமல் நடைபாதை மேம்பாலங்களில் காத்திருப்பதையோ அல்லது நிற்பதையோ நாங்கள் கவனித்தோம். இதனால், மற்றவா்களுக்கு நெரிசல் மற்றும் தாமதம் ஏற்படுகிறது. இப்போது, உரிய காரணமின்றி யாரும் அங்கு நிற்க அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று அந்த அதிகாரி கூறினாா்.
மற்றொரு அதிகாரி கூறுகையில், ’கூட்டத்தை மேலும் கட்டுப்படுத்த, ரயில் நிலையத்திற்கு வெளியே தற்காலிக ’பந்தல்’ கொண்ட ஒரு நியமிக்கப்பட்ட காத்திருப்புப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து நடைபாதைகளிலும் நடைபாதை ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகள் உரிய காரணமின்றி நடைபாதைகளில் அமர அனுமதிக்கப்பட மாட்டாா்கள்’ என்றாா்.