நெப்போலியன் குடும்பத்தின் 900 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டு! - சினிமாவை மிஞ்சி...
புதுவை: பெண்களுக்கு Night Shift தடை: "பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என அரசு ஒப்புக்கொள்கிறதா?"- திமுக
பெண்களை இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை தொழிற்சாலைகளில் பணியில் ஈடுபடுத்துவதற்குத் தடை விதித்து புதுச்சேரி தொழிலாளர் துறை அரசாணை வெளியிட்டிருக்கிறது.
அதுகுறித்துப் பேசியிருக்கும் புதுச்சேரி தி.மு.க மகளிரணி அமைப்பாளர் காயத்ரி ஸ்ரீகாந்த், "புதுச்சேரியில் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை பெண்களைப் பணியில் ஈடுபடுத்துவதை தடை செய்யும் இந்த உத்தரவு, பெண்களின் வேலைவாய்ப்பு உரிமைகளைப் பறிக்கும்.
பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை அழித்தொழிக்கும். பாலின சமத்துவத்தை மீறும் அணுகுமுறையாகும். தொழிலாளர்கள் சட்டம், 1948-இன் பிரிவு 66(1)(b) உழைக்கும் பெண்களுக்கு எதிரான பழமையான விதிகளை அடிப்படையாகக் கொண்டது. சமகாலத்தில் இது பெண்களுக்கு எதிரான ஒரு தடையாக மாறியுள்ளது.

பெண்களுக்கான உரிமைகளைக் கோரும் இந்திய அரசியலமைப்புப் பிரிவு 14 - சம உரிமை, பிரிவு 15 - பாலின சமத்துவம் மற்றும் பிரிவு 16 - தொழில் வாய்ப்புகளில் சம வாய்ப்பு ஆகியவற்றை மீறுவதாக அமைகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் வசந்தா 2017 வழக்கின் தீர்ப்பு, பெண்களுக்கு இரவு பணி உரிமையை அங்கீகரித்துள்ளது.
ஆனால், புதுச்சேரி தொழிலாளர் நலத்துறையின் உத்தரவு, பெண்களின் பாதுகாப்பு என்ற பெயரில் அவர்களின் தொழில் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தி பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக்குகிறது.
பெண்களின் வருமானம் குறையும், குறிப்பாக ஐ.டி., உற்பத்தி, தொழிற்சாலைகள், பெரு நிறுவனங்களில் இரவு பணி தேவைப்படும் இடங்களில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் அழிக்கப்படும். இவை பெண்களின் சுயமரியாதை, குடும்ப பொறுப்புகளைச் சமாளிக்கும் திறனைப் பாதிக்கும்.
தேசிய அளவில், பெண்களின் தொழிலாளர் பங்கு ஏற்கனவே 25%க்கும் குறைவாக உள்ள நிலையில், இது பொருளாதாரச் சமநிலையை மிகவும் மோசமாக்கும். பெண்கள் உயர் பதவிகளுக்கு முன்னேற முடியாத சூழலை ஏற்படுத்தும்.
இது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கும் கொள்கைகளுக்கும் எதிரானது. பெண்களின் தலைமைத்துவத்தை அழிக்கிறது. தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் ஆண்களை மட்டும் நியமிக்க வேண்டியிருக்கும். இதனால் உற்பத்தி குறைந்து, செலவு அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
புதுச்சேரி அரசு 2025 செப்டம்பரில் Shops and Establishments Act-ஐ திருத்தி இரவு பணியை அனுமதிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இது தற்போதைய தடையின் தேவையின்மையை மேலும் உறுதிப்படுத்துகிறது. பெண்களுக்கு இரவில் பாதுகாப்பு இல்லை என்று புதுச்சேரி அரசே உறுதி செய்கிறதா?

பெண்களின் உடல்நலன், குடும்பச் சமநிலை ஆகியவற்றைப் பற்றி கவலைப்படும் கூட்டம் ஆண்கள் இரவு நேரத்தில் வேலை செய்வதால் அவர்கள் உடல்நலன் கெடாதா? குடும்பப் பிணைப்பில் ஊறு விளையாதா?
பணியிடத்தில் பாதுகாப்பு அளிக்க போஷ் சட்டம், 2013 மற்றும் இதர இடங்களில் காவல்துறையின் பங்களிப்பும் இருக்கும்போது பாதுகாப்பு என்று சொல்லி பெண்களை வீட்டில் முடக்கும் உத்தரவு இது. புதுச்சேரி தொழிலாளர் துறை இந்த உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
இல்லையெனில், பெண்கள் உரிமைகள் காக்க போராட்டங்கள், சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், என அனைத்து பெண் அமைப்புகள் இணைந்து இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுப்போம்" என்று தெரிவித்திருக்கிறார்.




















