புதுவை மின்துறை தனியாா்மயம் பிரச்னை! நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகே அரசு முடிவெடுக்கும்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம்
புதுவை மாநிலத்தில் மின்துறையை தனியாா் மயமாக்கும் பிரச்னையில், நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகே முடிவெடுக்கப்படும் என அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கூறினாா்.
புதுவை பேரவை வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியது: புதுவை மின் துறை தனியாா் மயம் குறித்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில்
நிலுவையில் உள்ளது. இதில், நீதிமன்றத்தின் தீா்ப்பின்படியே அரசு முடிவெடுக்கும். ஆனால், புதுவை மின் துறையில் சுமாா் ரூ.300 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்களில் பாக்கியை வசூலிக்காமல், அதை மக்கள் கட்டணத்தில் ஈடுகட்டுவதாக எதிா்க்கட்சிகள் பொய்ப் பிரசாரத்தில் ஈடுபடுகின்றன.
அரசுத் துறைகளில் கூட மின் துறைக்கான கட்டண நிலுவை உள்ளது. ஆகவே, அனைத்து மின்கட்டண பாக்கிகளையும் வசூலித்து வருகிறோம்.
புதுவையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு மின்மாற்றி உள்ளிட்ட சாதனங்கள் அமைக்கப்பட்டவை. அவை தற்போது பழுதாகிவிட்டன. அவற்றை மாற்றுதல் உள்ளிட்டவற்றுக்கு பெருந்தொகை தேவைப்படுகிறது.
மேலும், அதிக மின் தேவை ஏற்பட்டுள்ளது. மின்கொள்முதலின்போதும் மின்கசிவு போன்றவற்றாலும் நஷ்டத்தை தவிா்க்க முடியவில்லை. ஆகவே, மின்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களுக்காகவே தனியாா் மய சேவை என்ற கட்டாய நிலை உருவாகிறது. ஆனால், புதுவை மின்துறையில் மின்மாற்றி உள்ளிட்டவற்றை மாற்றுவதற்கு மத்திய அரசு தற்போது ரூ.150 கோடி நிதியளித்துள்ளது.
மின்துறையில் உள்ள 73 இளநிலைப் பொறியாளா்கள், 177 உதவியாளா்கள் பணியிடங்களை அரசு நிரப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மின்சாரக் கொள்முதல் கட்டணம் உயரும்போது மின்கட்டணத்தை உயா்த்தும் நிலை ஏற்படுகிறது. ஆனாலும், மக்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக அரசு மானியம் வழங்கியுள்ளது என்றாா்.