புது மின்சார ஸ்கூட்டரை பழுதுபார்க்க ரூ.90,000: உரிமையாளர் செய்தது என்ன?
புதிதாக வாங்கிய மின்சார ஸ்கூட்டரில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய, ரூ.90,000 பில் வந்ததால் அதிர்ச்சியடைந்த வாகன உரிமையாளர், வாகனத்தை அடித்து நொறுக்கியிருக்கிறார்.
ஆனால், இந்த விடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
அந்த விடியோவில், புகழ்பெற்ற தனியார் நிறுவனத்தின் மின்னணு ஸ்கூட்டரை சுத்தியல் கொண்டு கடும் கோபத்துடன் உடைக்கிறார் ஒருவர். ஆனால், விடியோவை பதிவு செய்த நபர், ஒரு மாதத்துக்கு முன்பு வாங்கிய மின்னணு ஸ்கூட்டரில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய வாகன பழுதுபார்க்கும் மையத்திலிருந்து ரூ.90,000 கட்டணம் செலுத்த பில் அனுப்பப்பட்டதையடுத்து, அவர் அந்த வாகனத்தை நேராக, வாகன விற்பனையகத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.
விற்பனையகத்தின் வாயில் முன்பு வாகனத்தை நிறுத்தி அதனை சுக்குநூறாக உடைத்திருக்கிறார். இதனை அங்கிருந்த பலரும் விடியோ எடுத்திருக்கிறார்கள். சிலர் சமூக வலைதளத்திலும் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக எந்தப் புகாரும் தங்களுக்கு வரவில்லை என்று மின்னணு ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.
இந்த விடியோவுக்கு பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். வாகன பழுதுபார்க்கும் மையங்கள் சரியாக இயங்கவில்லை என்றும், அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.