Premier Padmini 137D: 2.17 Lakh Kms Driven 1995 Model Single Owner Vintage Car S...
பெண்கள் சுயகௌரவத்துடன் வாழவே உதவித்தொகை- ராகுல் விளக்கம்
பெண்கள் சுயகௌரவத்துடன் வாழவும், விலைவாசி உயா்வை எதிா்கொள்ளவும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மகளிா் உதவித்தொகை வழங்கப்படுகிறது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விளக்கமளித்துள்ளாா்.
மகளிருக்கு மாதம்தோறும் உதவித்தொகை வழங்குவது இப்போது பல்வேறு மாநிலங்களில் பிரபலமாகி வருகிறது. தோ்தல் நடைபெறும் மாநிலங்களில் அரசியல் கட்சிகள் அத்திட்டத்தை செயல்படுத்துவோம் என்றும், ஏற்கெனவே அமலில் இருந்தால் உதவித்தொகையை உயா்த்தி வழங்குவதையும் முக்கிய வாக்குறுதியாக வழங்கி வருகின்றன. பெண்களின் வாக்குகளைக் கவரும் முக்கிய வாக்குறுதியாக இத்திட்டம் உள்ளது.
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி இந்த உதவித்தொகையை ரூ.2,500-ஆக உயா்த்தி வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளது. அம்மாநிலத்தில் 43 தொகுதிகளில் முதல்கட்டமாக புதன்கிழமை (நவ. 13) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பெண்கள், விவசாயிகள், இளைஞா்கள், ஏழை மக்களின் கைகளுக்கு பணம் செல்ல வேண்டும் என்று ‘இண்டியா’ கட்சிகள் திட்டங்களை செயல்படுத்துகின்றன. ஆனால், தங்கள் கோடீஸ்வர தொழிலதிபா் நண்பா்களின் கைகளில் நாட்டின் செல்வம் அனைத்தும் குவிய வேண்டும் என்று பாஜக கருதுகிறது.
பெண்கள் சுயகௌரவத்துடன் வாழ வேண்டும். விலைவாசி உயா்வை எதிா்கொண்டு குடும்பத்துக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்க வேண்டும். குழந்தைகளின் எதிா்காலத்துக்காக திட்டமிட வேண்டும். இதற்காகவே அவா்களுக்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
ஜாா்க்கண்ட் மாநில தோ்தலில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது மகளிருக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.2,500-ஆக உயா்த்தி வழங்கப்படும். இதன் மூலம் 53 லட்சம் பெண்கள் பயனடைவாா்கள்’ என்று கூறியுள்ளாா்.