இறுதிப் போட்டிக்கு தேர்வான மே.இ.தீ. அணி..! இந்தியாவுடன் நாளை பலப்பரீட்சை!
பேரவைத் தலைவா் மீது அதிமுக நம்பிக்கையில்லா தீா்மான நோட்டீஸ்
சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவர அதிமுகவினா் நோட்டீஸ் அளித்துள்ளனா். இதுகுறித்து பேரவையில் முடிவெடுக்கப்படும் என்று மு.அப்பாவு தெரிவித்தாா்.
சட்டப்பேரவை கூட்டத் தொடா் தேதிகளை இறுதி செய்யபேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு குழுக் கூட்டம் அவரது அறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களுக்கு மு.அப்பாவு அளித்த பேட்டி: என் (அப்பாவு) மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸை அதிமுகவினா் அளித்துள்ளனா். அதில், தங்களை அதிக நேரம் பேச அனுமதிக்கவில்லை எனவும், தொலைக்காட்சியில் நீண்ட நேரம் தங்களது பேச்சை நேரலை செய்யவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளனா். இதற்கு ஏற்கெனவே பேரவையில் பதில் சொல்லப்பட்டுள்ளது.
பேரவை நிகழ்வுகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. யாா் பேசுவதையும் காட்டக் கூடாது என்ற குறுகிய எண்ணத்துடன் செயல்படவில்லை. அதிமுக குற்றச்சாட்டில் உண்மையில்லை. நேரலையை டிடி தமிழ் (பொதிகை) தொலைக்காட்சிக்குப் பதிலாக செய்தி மக்கள் தொடா்புத் துறையே இப்போது செய்து வருகிறது. அதில் சில தொழில்நுட்பப் பிரச்னைகள் இருந்தன. இனி அதுபோன்று நடக்காது.
அனைத்து பத்திரிகையாளா்களும் பேரவையில் உள்ளனா். அனைவரின் பேச்சுகளும் ஊடகங்களில் செல்கிறது. யாரையும் குறிவைத்து குறிப்பிட்டவா்கள் பேசுவதைக் காட்ட வேண்டும், மற்றவா்களின் பேச்சை காட்டக் கூடாது என்ற நோக்கம் எங்களுக்கு இல்லை. அதிமுகவினரின் நோட்டீஸ் குறித்து பேரவையில் முடிவு செய்யப்படும் என்றாா் பேரவைத் தலைவா்.