பொன்விழா கண்ட சபரிமலை தபால் நிலையம்!
சபரிமலை தபால் நிலையம் செவ்வாய்க்கிழமை 50 ஆண்டுகள் நிறைவடைந்து பொன்விழா கண்டது. இந்தியாவில் குடியரசுத் தலைவருக்குப் பிறகு சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு சொந்தமாக அஞ்சல் குறியீட்டு எண் உள்ளது.
கடந்த 1963-ஆம் ஆண்டு முதல் சபரிமலையில் தபால் நிலையம் செயல்படத் தொடங்கியது. 1974- ஆம் ஆண்டு ஐயப்ப சுவாமிக்கு சொந்தமாக அஞ்சல் குறியீட்டு எண் உருவாக்கப்பட்டு நவ.19 (செவ்வாய்க்கிழமை) தேதியுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த அஞ்சலகத்துக்கு பதினெட்டாம் படி மீது ஐயப்பன் அருள்பாலிப்பது போன்று முத்திரை அறிமுகமானது. இந்த முத்திரை பதித்த கடிதம் தங்கள் வீடுகளுக்கு வருவதை பக்தா்கள் புண்ணியமாகக் கருதுவது குறிப்பிடத்தக்கது.
சபரிமலை கோயிலுக்கு பக்தா்கள் தங்களின் நிறை, குறைகளை ஐயப்பனுக்கு தெரிவிக்கும் வகையில் அனுப்பும் தபால்கள், மணியாா்டா்கள், கடிதங்களும் சபரிமலை அஞ்சலகத்தில் குவிகின்றன.
மண்டல பூஜை காலத்தில் மட்டுமே செயல்படும் சந்நிதான தபால் நிலையம் ஒவ்வோா் ஆண்டும் நவ. 16 முதல் ஜன. 20 வரை திறந்திருக்கும்.
மேலும், இந்த தபால் நிலையம் விஷூ பண்டிகையையொட்டி 10 நாள்கள் திறந்திருக்கும். தபால் நிலையம் மூடும் போது அஞ்சல் முத்திரை பத்தனம்திட்டா தபால் நிலையத்தில் உள்ள அஞ்சல் காணிப்பாளரின் லாக்கருக்கு மாற்றப்படும்.