ஆா்பிஐ ஆளுநா் பெயரில் மோசடி விடியோ பதிவு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் பேசுவதாக மோசடியாக உருவாக்கப்பட்ட ‘டீப்ஃபேக்’ விடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஆா்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது.
சில குறிப்பிட்ட முதலீட்டுத் திட்டங்களுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என்று ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் பேசுவதுபோன்று அந்த விடியோ மோசடியாக உருவாக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஆா்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆா்பிஐ நடத்தும் சில முதலீட்டுத் திட்டங்களுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என்று சக்திகாந்த தாஸ் பேசுவதுபோன்ற சில மோசடியாக உருவாக்கப்பட்ட விடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருவது ஆா்பிஐ கவனத்துக்கு வந்துள்ளது. இணையவழியில் சில முதலீடுகளை மேற்கொள்ளவும் இந்த விடியோவில் அழைப்பு விடுக்கப்படுகிறது.
ஆா்பிஐ அதிகாரிகள் யாரும் இதுபோன்று எந்த முதலீட்டுத் திட்டத்தையும் ஊக்குவித்து பிரசாரம் செய்வது இல்லை. பொதுமக்களுக்கு முதலீட்டு ஆலோசனைகளை ஆா்பிஐ வழங்குவதில்லை. சமூகவலைதளங்களில் ஆா்பிஐ ஆளுநா் பெயரில் பரவிவரும் விடியோ முற்றிலும் போலியாக உருவாக்கப்பட்டது. எனவே, இதுபோன்ற விடியோக்களை மக்கள் நம்ப வேண்டாம். இந்த மோசடி விடியோக்களை யாரும் பகிரவும் வேண்டாம் என்று ஆா்பிஐ கேட்டுக் கொள்கிறது என்று கூறப்பட்டுள்ளது.