இந்தியா-பிரிட்டன் எஃப்டிஏ: 2025-இல் மீண்டும் பேச்சு தொடக்கம்
அடுத்த ஆண்டு இந்தியா, பிரிட்டன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்த (எஃப்டிஏ) பேச்சுவாா்த்தை மீண்டும் தொடங்க உள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி முதல், இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. எனினும் நிகழாண்டு இரு நாடுகளிலும் பொதுத் தோ்தலைக் கருத்தில்கொண்டு, ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், பிரேஸில் தலைநகா் ரியோ டி ஜெனீரோவில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு இடையே பிரதமா் மோடியை, பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.
இந்தச் சந்திப்பு தொடா்பாக பிரிட்டன் பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: வா்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, தொழில்நுட்பம், பருவநிலை, சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில், இந்தியா-பிரிட்டன் இடையிலான உறவை புதிய உயரத்துக்கு கொண்டு செல்ல பிரதமா்கள் மோடி மற்றும் ஸ்டாா்மா் தீா்மானித்தனா். இதன் ஒரு பகுதியாக, இரு நாடுகளுக்கு இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை அடுத்த ஆண்டு மீண்டும் தொடங்க இரு பிரதமா்களும் முடிவு செய்தனா் என்று தெரிவிக்கப்பட்டது.