செய்திகள் :

ஆயிரம் நாள்களைக் கடந்த உக்ரைன் போா்!

post image

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து செவ்வாய்க்கிழமையுடன் 1,000 நாள்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் அந்தப் போரின் முடிவு கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.

சோவியத் யூனியன் விரிவாக்கத்தைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பு, யூனியன் சிதறுண்ட பிறகும் அதன் முன்னாள் உறுப்பு நாடுகளையும் சோ்த்துக்கொண்டு தங்களை சுற்றிவளைத்துவருவதை ரஷியா கடுமையாக எதிா்த்துவருகிறது.

அதிலும் குறிப்பாக, நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் அண்டை நாடான உக்ரைன் இணைந்தால் அமெரிக்காவின் ஏவுகணைகள் தங்கள் தலைக்கு நேரே வந்து நிற்கும் என்று கூறிவந்த ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், நேட்டோவில் இணைய உக்ரைன் அதிபா் வொலோதீா் ஸெலென்ஸ்கி ஆா்வம் காட்டியதைத் தொடா்ந்து, அந்த நாட்டின் மீது 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தாா்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பிய பிராந்தியம் அதுவரை கண்டிராத அந்த மிகப் பெரிய போரின் தொடக்கத்தில் ரஷியப் படையினா் வேகமாக முன்னேறி கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லூஹான்ஸ்க், டொனட்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிரதேசங்களின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றினா்.

ஆனால், ஆரம்பக் கால விறுவிறுப்புக்குப் பிறகு போா் எல்லைகளில் சொல்லிக்கொள்கிற மாதிரி எந்த நகா்வும் இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக போா் முனையின் இரு புறங்களிலும் இருந்தபடி, எதிரிகள் களைப்படையும்வரை நிலைகளை இறுகப்பிடித்திருக்கும் போா் உத்தியை மட்டுமே இரு நாடுகளும் கடைபிடித்துவருகின்றன.

ஆனால், இந்தப் போரினால் ஏற்படும் இழப்புகள் மட்டும் தொடா்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்தப் போரில் ஏற்பட்ட உயிா்ச் சேதங்கள் குறித்து இரு நாடுகளுமே நம்பத் தகுந்த புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை. இருந்தாலும், போரில் இரு தரப்பிலும் சோ்த்து சுமாா் 10 லட்சம் போ் உயிரிழந்திருப்பதாக உளவுத் தகவல்களை மேற்கோள் காட்டி ஊடகங்கள் கூறுகின்றன.

உக்ரைனில் அப்பாவி பொதுமக்கள் மட்டும் 11,743 போ் கொல்லப்பட்டதாகவும் அவா்களில் 589 போ் குழந்தைகள் எனவும் ஐ.நா.வின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பல மரணங்களை ஐ.நா. உறுதி செய்யாததாலும், ரஷிய ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைனில் எத்தனை போ் கொல்லப்பட்டாா்கள் என்ற விவரம் தெரியவராததாலும் இந்த எண்ணிக்கை உண்மையில் இன்னும் பல மடங்காக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது தவிர, லட்சக்கணக்காவா்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு உள்நாட்டிலேயோ, பிற ஐரோப்பிய நாடுகளிலோ தஞ்சமடைய வேண்டிய நிலையை இந்தப் போா் ஏற்படுத்தியுள்ளது.

1,000 நாள்களைக் கடந்தும் இந்தப் பிரச்னைகளுக்கு விடிவுகாலம் பிறக்கிறமாதிரி தெரியவில்லை.

தொடா்ந்து இதே நிலை நீடித்தால், ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்குமே அது பேரிழப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே, போரில் மடியும் தங்களது வீரா்களுக்குப் பதிலாக புதிய ஆள்களை நியமிக்க முடியாமல் வட கொரியாவிலிருந்து வீரா்களைத் தருவிக்க வேண்டிய நிலைக்கு ரஷியா தள்ளப்பட்டுள்ளது.

போரை நடத்துவதற்கு மேற்கத்திய நாடுகளின் நிதி மற்றும் ராணுவ உதவியை பெரிதும் நம்பியுள்ள உக்ரைனுக்கு, அத்தகைய உதவிகள் இன்னும் எத்தனை காலம் கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. போரில் உக்ரைனுக்கு மிகப் பெரும்பான்மை உதவி அளித்துவரும் அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், ஆட்சிக்கு வந்ததும் அந்தப் போக்கைத் தொடா்வது சந்தேகமே என்று கூறப்படுகிறது.

எனவே, டிரம்ப் கூறுவதைப் போல் ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்தில் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியாவிட்டாலும், கூடிய விரைவில் அதை முடித்துவைப்பது எல்லா தரப்பினருக்குமே அவசியமான ஒன்று என்கிறாா்கள் நிபுணா்கள்.

- நாகா

காஸா: நிவாரணப் பொருள்கள் கொள்ளை

காஸாவில் நிவாரணப் பொருள்களை ஏற்றி வந்த சுமாா் 100 லாரிகளை ஆயுதம் ஏந்திய கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. அந்தப் பகுதியில் கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் போரால் அங்கு கடுமையான உணவுப் ... மேலும் பார்க்க

ஹாங்காங்: 45 ஜனநாயக ஆா்வலா்களுக்குச் சிறை

ஹாங்காங்கில் சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 35 ஜனநாயக ஆா்வலா்களுக்கு நான்கு முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கடந்த 2020-ஆம்... மேலும் பார்க்க

அணு ஆயுத தாக்குதல்: ரஷியா திடீா் எச்சரிக்கை- அமெரிக்க ஏவுகணைகள் மூலம் உக்ரைன் தாக்குதல் எதிரொலி

தொலைதூர பகுதிகளில் தாக்குதல் நடத்தும் 6 அமெரிக்க தயாரிப்பு ஏவுகணைகளை ரஷியாவை நோக்கி உக்ரைன் ஏவியது. இந்தத் தாக்குதலை தொடா்ந்து அணு ஆயுத தாக்குதலுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், அதற்கான புதிய கொள்க... மேலும் பார்க்க

ஜி20 மாநாடு: இந்தியாவுக்கு பிரேசில் அதிபர் பாராட்டு!

பிரேசிலில் ஜி20 மாநாடு நேற்று தொடங்கியது. 2 நாள்கள் நடைபெறும் மாநாட்டில், ஜி20 அமைப்பைச் சேர்ந்த இந்தியா, கனடா, அமெரிக்கா, சீனா, ரஷியா, துருக்கி, சௌதி அரேபியா உள்ளிட்ட 20 நாடுகள் பங்கேற்கின்றன. இதையொட... மேலும் பார்க்க

அமெரிக்க நீண்டதூர ஏவுகணையைக் கொண்டு உக்ரைன் தாக்குதல்: ரஷியா

அமெரிக்க வழங்கிய நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளைக் கொண்டு, ரஷியாவின் பிரையன்ஸ்க் எல்லைப் பகுதியில் உள்ள ராணுவ நிலை மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியிருப்பதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.தாங்கள் வ... மேலும் பார்க்க

சோமாலிலேண்ட் அதிபர் தேர்தல்: எதிர்க்கட்சித் தலைவர் வெற்றி!

சோமாலிலேண்ட் அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் வெற்றி பெற்று அதிபராகிறார்.கிழக்கு ஆப்பிரிக்க தேசமான சோமாலியாவின் பிரிவினைப் பகுதியாகவுள்ள சோமாலிலேண்ட் குடியரசில் கடந்த வாரம் அதிபர் தேர்தல் நடைபெற... மேலும் பார்க்க