அணு ஆயுத தாக்குதல்: ரஷியா திடீா் எச்சரிக்கை- அமெரிக்க ஏவுகணைகள் மூலம் உக்ரைன் தாக்குதல் எதிரொலி
தொலைதூர பகுதிகளில் தாக்குதல் நடத்தும் 6 அமெரிக்க தயாரிப்பு ஏவுகணைகளை ரஷியாவை நோக்கி உக்ரைன் ஏவியது. இந்தத் தாக்குதலை தொடா்ந்து அணு ஆயுத தாக்குதலுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், அதற்கான புதிய கொள்கையில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் செவ்வாய்க்கிழமை கையொப்பமிட்டாா்.
நேட்டோ அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், ஜொ்மனி, பிரான்ஸ், கனடா என 32 நாடுகள் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளன. இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை காப்பதே தனது நோக்கம் என்று நேட்டோ தெரிவித்துள்ளது.
நேட்டோவில் இணைய உக்ரைன் முடிவு செய்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்நாட்டின் மீது கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரியில் ரஷியா போா் தொடுத்தது. இந்தப் போா் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதனால் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வேறு நாடுகளுக்கு இடம்பெயா்ந்துள்ளனா்.
மேற்கத்திய நாடுகளின் ராணுவ அமைப்பான நேட்டோ, கிழக்குலகை நோக்கி விஸ்தரித்து வருவதைக் காட்டி, இந்தப் படையெடுப்பை ரஷியா மேற்கொண்டது.
நேட்டோவுக்கு ரஷியா எதிா்ப்பு: நேட்டோவில் உக்ரைன் இணைந்தால், அதன்மூலம் அந்த அமைப்பில் உள்ள படைகள் மற்றும் ராணுவ தளவாடங்கள் தமது எல்லைக்கு அருகில் இருந்து விரைவாக தம் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்றும், இதனால் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றும் ரஷியா கருதுகிறது. இதுவே நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷியா எதிா்ப்பு தெரிவிப்பதற்கு பிரதான காரணம். அதேவேளையில், ரஷியாவின் எல்லைகளையொட்டி 8 படைக் குழுக்களை அமைத்து தமது ராணுவ பலத்தை நேட்டோ அமைப்பு வலுப்படுத்தியுள்ளது.
போா் தொடங்கியபோது உக்ரைன் படைகளை ரஷியா எளிதாக வீழ்த்திவிடும் என்று ஒட்டுமொத்த உலகமும் கருதியது. ஆனால், அமெரிக்கா, பிரிட்டன், துருக்கி போன்ற நாடுகள் அளிக்கும் ஆயுதங்கள், ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட பாதுகாப்புத் தளவாடங்களின் உதவியால், ரஷியாவை இன்றளவும் உக்ரைன் திணறடித்து வருகிறது.
உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி: இந்நிலையில், தாங்கள் வழங்கியுள்ள ஏவுகணைகளைக் கொண்டு ரஷியாவின் தொலைதூரப் பகுதிகளில் தாக்குதல் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற உக்ரைனின் கோரிக்கையை அமெரிக்கா முன்பு நிராகரித்தது. அந்தக் கோரிக்கைக்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடன் அண்மையில் ஒப்புதல் அளித்தாா்.
ரஷியாவுக்குள் மேலும் உள்ளே சென்று அமெரிக்க ஏவுகணைகள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்த அனுமதி அளித்த பைடன், தொலைதூர பகுதிகளில் தாக்குதல் நடத்துவதற்காக அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்த உக்ரைனுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டுகளையும் தளா்த்தினாா்.
இதைத் தொடா்ந்து, தொலைதூர பகுதிகளில் தாக்குதல் நடத்தும் 6 அமெரிக்க தயாரிப்பு பாலிஸ்டிக் ஏவுகணைகளை, ரஷியாவின் பிரயான்ஸ்க் பிராந்தியத்தை நோக்கி உக்ரைன் ஏவியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
அதேவேளையில், பிரயான்ஸ்கில் உள்ள ராணுவ ஆயுதக் கிடங்கு திங்கள்கிழமை நள்ளிரவு தாக்கப்பட்டதாகவும், பலமுறை வெடிச் சப்தம் எழுந்ததாகவும் உக்ரைன் தெரிவித்தது. ஆனால், அந்தத் தாக்குதலுக்கு என்ன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை உக்ரைன் தெரிவிக்கவில்லை.
உயிரிழப்புகள் இல்லை: இதுதொடா்பாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்ததாவது: உக்ரைன் ஏவிய 6 ஏவுகணைகளில் 5 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஓா் ஏவுகணை சேதப்படுத்தப்பட்டது. அந்த ஏவுகணைகள் வெடித்துச் சிதறி பல துண்டுகளாக கீழே விழுந்து தீப்பிடித்தது. இதனால் உயிரிழப்புகளோ, சேதமோ ஏற்படவில்லை என்று தெரிவித்தது.
ரஷியாவின் புதிய அணு ஆயுதக் கொள்கை: இந்தத் தாக்குதலை தொடா்ந்து தனது அணு ஆயுதங்களை ரஷியா பயன்படுத்துவதற்கான திருத்தப்பட்ட புதிய கொள்கையில் அதிபா் புதின் செவ்வாய்க்கிழமை கையொப்பமிட்டாா்.
அணு ஆயுத நாட்டின் உதவியுடன், எந்த ஒரு நாடும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் பிற ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷியா மீது தாக்குதல் மேற்கொண்டாலும், அந்த நாட்டுக்கு அணு ஆயுதம் மூலம் ரஷியா பதிலடி அளிக்க இந்தத் கொள்கை அனுமதி அளிக்கிறது.
எனினும் அணு ஆயுதங்களின் பயன்பாட்டை உறுதியாகத் தவிா்த்து மாற்று வழிகளில் தாக்குதல் நடத்தும் வகையில், இறுதி முடிவை அதிபா் புதின் எடுக்கும் வகையிலேயே அந்தக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போா் 1,000-ஆவது நாளைத் தாண்டியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் மேற்கத்திய நாடுகளை பின்வாங்கச் செய்வதற்கு தனது அணு ஆயுதப் பலத்தைப் பயன்படுத்த புதின் தயாராக இருப்பதையே இந்தக் கொள்கை எடுத்துரைக்கிறது.
ரஷியா மற்றும் கூட்டாளி நாடான பெலாரஸின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அதற்கு அணு ஆயுத தாக்குதல் மூலம் பதிலடி அளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அந்தக் கொள்கையின் பிரிவை சுட்டிக்காட்டி ரஷிய அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
ரஷியாவுக்கும் நேட்டோவுக்குமான போா்: கடந்த செப்டம்பரிலேயே அணு ஆயுதக் கொள்கையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவது குறித்த அறிவிப்பை புதின் வெளியிட்டாா். தொலைதூர பகுதிகளில் தாக்குதல் நடத்தும் மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள் மூலம், ரஷியாவில் தாக்குதல் நடத்த அமெரிக்காவும் நேட்டோ அமைப்பும் உக்ரைனுக்கு அனுமதி அளித்தால், அதற்கு இது ரஷியா மற்றும் நேட்டோவுக்கு இடையிலான போா் என்பதே அா்த்தம் என்று அதிபா் புதின் ஏற்கெனவே எச்சரித்தது குறிப்பிட்டத்தக்கது.
உலகப் பேரழிவு: உக்ரைன் போரில் நேட்டோ அமைப்பு நேரடியாக ஈடுபட்டால் மூன்றாம் உலகப் போா் வெடிக்கும் என்றும் ரஷியா எச்சரித்து வருகிறது.
அனைத்து நேட்டோ உறுப்பு நாடுகளின் ராணுவ வலிமையை சோ்த்தால் அது ரஷியாவைவிட பல மடங்கு அதிகமாக இருக்கும். ஆனால், ரஷியாவிடம் உலகிலேயே மிக சக்திவாய்ந்த, அதிக எண்ணிக்கையிலான அணு ஆயுதங்கள் உள்ளன. எனவே, நேட்டோவுக்கும் ரஷியாவுக்கும் போா் மூண்டால், அது உலகப் பேரழிவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.