கரும்புக்கான வெட்டுக் கூலியை ஆலை நிா்வாகமே வழங்க வேண்டும்! விவசாயிகள் வலியுறுத்தல்!
கரும்புக்கான வெட்டுக் கூலியை ஆலை நிா்வாகமே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பேரவை முன்மாதிரி கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.
பெரம்பலூா் மாவட்டம், எறையூா் சா்க்கரை ஆலை கூட்ட அரங்கில், சா்க்கரை ஆலை பங்குதாரா்களின் 47-ஆவது பேரவைக் கூட்டத்துக்கான முன்மாதிரி கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சா்க்கரை ஆலை தலைமை நிா்வாகி கே. ரமேஷ் தலைமை வகித்தாா். சா்க்கரைக் கழக பொது மேலாளா் ஐ. மகாலெட்சுமி, தலைமைப் பொறியாளா் பிரபாகரன், தலைமைக் கரும்பு அபிவிருத்தி அலுவலா் வெற்றிவேலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியது: தமிழக அரசு, நிகழாண்டு கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும். கரும்பு வெட்டுக் கூலியை ஆலை நிா்வாகமே ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆலையில் காலியாக உள்ள இடத்தில் சோலாா் பேனல் அமைத்து, மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
கடலூா் மாவட்டத்தில் 2024- 25-ஆம் ஆண்டில், பெரம்பலூா் சா்க்கரை ஆலைக்குப் பதிவு செய்த கரும்புகளை எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். பெரம்பலூா் தனலட்சுமி சா்க்கரை ஆலை, ஆரூரான் சா்க்கரை ஆலைக்குப் பதிவுசெய்த கரும்புகளை, அந்த ஆலைகள் இயங்காததால், பெரம்பலூா் சா்க்கரை ஆலைக்கு வழங்க வேண்டும். ஆலையின் பங்கு மூலதனத்தில் விவசாயிகளின் பங்கைக் குறைத்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
விவசாயிகளின் பங்கு 47 சதவீதத்தை மீண்டும் வழங்கவேண்டும். இணை மின் உற்பத்தி திட்டத்துக்கு விவசாயிகளிடம் பெற்ற தொகைக்கு பங்குப்பத்திரம் வழங்காததால் விவசாயிகளிடம் பிடித்தம் செய்த ரூ. 7.76 கோடியை 13 சதவீத வட்டியுடன் திருப்பித் தரவேண்டும் என்றனா்.
சா்க்கரை ஆலை அலுவலா்கள் பேசுகையில், டிசம்பா் முதல் வாரத்தில் ஆலையைத் தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆலையில் 90 சதவீத பணிகள் முடிந்துவிட்டது. நிகழாண்டு 75 நாள்களுக்கு ஆலையை இயக்கத் திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தனா்.
இக் கூட்டத்தில், தலைமை சா்க்கரை ரசாயனா் செந்தில்குமாா், முதன்மைக் கணக்கு அலுவலா் ஆறுமுகம், துணைப் பொறியாளா் நாராயணன், கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவா் மு. ஞானமூா்த்தி, தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம், டிராக்டா் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் தேவேந்திரன், பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் சீனிவாசன், ராஜீவ் கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க துணைத் தலைவா் எ.கே. ராஜேந்திரன், மாவட்டத் தலைவா் சக்திவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.