செய்திகள் :

”பொய்க்கு மேக்கப் போடுகிறார் எடப்பாடி பழனிசாமி; அது அம்பலமாகி விடும்”- சாடிய முதல்வர் ஸ்டாலின்!

post image

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இதற்காக நேற்று இரவே ஜெயங்கொண்டம் வந்த ஸ்டாலின் அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார். இதற்காக விருந்தினர் மாளிகை முன்கூட்டியே தடபுடலாக புதுபிக்கப்பட்டது. இதையடுத்து இன்று ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகே அமைப்பட்டப்பட்ட கருணாநிதி சிலையை திறந்து வைத்தார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ஆ.ராசா, அமைச்சர்கள் கே.என்.நேரு, சிவசங்கரன், கோவி.செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அரியலூர் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் ஸ்டாலின்

இதையடுத்து 130 ஏக்கரில், ரூ.1,000 கோடி மதிப்பில் ஜெயங்கொண்டம் சிப்காட்டில் புதிய காலணி தயாரிப்பதற்கான தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து, வாரணவாசி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அரியலூர் கொல்லாபுரத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதல்வர் ஸ்டாலினை ராஜேந்திர சோழன் என புகழ்ந்தார். இதைதொத் hடர்ந்து பேசிய திருமாவளவன், புதிய காலணி தயாரிப்பதற்கான தொழிற்சாலை மூலம் 15,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். வரலாற்று சிறப்புமிக்க மாவட்டம் என்றாலும், பின் தங்கிய அரியலூர் மாவட்டத்தில் சிமெண்ட் தொழிற்சாலைகள் இருந்தாலும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருந்தது. ஆனால் உங்கள் ஆட்சியில் அரியலூர் வளர்ச்சி பெற்று வருகிறது. இதற்காக இந்த மண்ணை சார்ந்தவன் என்பதால் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின்

இதையடுத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ''அரியலூர் மாவட்டத்தில் முடிவுற்ற 51 பணிகளை தொடங்கி வைத்து, 26 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். பெரம்பலூர் மாவட்டத்திற்கான முடிவுற்ற 456 பணிகளை திறந்து வைத்து, 27 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். ரூ.173 கோடி 96 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்க கூடிய விழாவான இதனை அரசு பெருவிழாவாக போக்குவரத்துத்துரை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஏற்பாடு செய்திருக்கிறார். அவருடைய பணிகளை நான் மனதார பாராட்டுகிறேன். சிவசங்கர் என்னால் வார்க்கப்பட்டவர் என்பதால் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி.

கடந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பல்வேறு திட்டப்பணிகளை நிறைவேற்றி இருக்கிறோம். நாங்கள் நிறைவேற்றிய திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இவ்வளவு திட்டங்களை நிறைவேற்றி தந்ததால் தான் நான் உங்கள் முன்பு கம்பீரமாக நிற்கிறேன். இன்னும் பல திட்டங்களை நிறைவேற்ற நினைப்பதால் உங்களை பார்க்க நான் மகிழ்ச்சியோடு வந்திருக்கிறேன்.

ஸ்டாலின்

அரியலூர் மாவட்டத்தில் நரியனூர் கூட்டு குடி நீர்த்திட்டம் உள்ளிட்டவை சுமார் ரூ. 3.20 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றபட உள்ளது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்திற்கான புதிய கட்டடம் கட்டப்படும். வாரணவாசியில் மருதையாற்றின் குறுக்கே ரூ.22 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை கட்டப்படும். பெரம்பலூர் மாவட்ட வெங்காய விவசாயிகள் பயன் பெறும் வகையில் புதிய வெங்காயம் விற்பனை மையம் அமைக்கப்படும். அரியலூரில் அனைத்து நீதிமன்றங்களும் ஒரே இடத்தில் செயல்படுகின்ற வகையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்கபடும்.

திட்டத்தை அறிவித்தோம். நிதி ஒதுக்கினோம், அதிகாரிகள் பார்த்து கொள்வார்கள் என ஓய்வெடுக்க போகிறவன் நான் இல்லை. கடந்த காலங்களில் ஒரு சிலர் இருந்தனர். தெரிந்தாலும் தெரியாத மாதிரி இருந்ததுடன் டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என பிரச்னைகளை கண்டு கொள்ளாமல் இருந்தனர். நான் பிரச்னைகளை நேர்கொண்டு நிற்கிறவன். அந்த பிரச்னையை தீர்ப்பேன். மக்களுக்காக பார்த்து பார்த்து திட்டங்களை தீட்டுகிறேன். திட்டங்கள் எப்படி செயல்படுகிறது என கள ஆய்வு செய்கிறேன். சொன்ன நாளுக்குள் திட்டங்களை திறந்து வைக்கிறேன்.

ஸ்டாலின்

அதனால் தான் ஸ்டாலின் எங்கு போனாலும் மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள். தேடி வந்து மனுக்களை கொடுக்கிறார்கள். பிரச்னைகளை தீர்ப்பார் என்கிற அவர்களின் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன். தமிழ்நாடு மக்கள் என் மீதும், திமுக மீதும் வைத்திருக்கிற நம்பிக்கையும், அளவில்லாமல் பொழியும் அன்பும் எதிர்க்கட்சி தலைவராக இருக்க கூடிய பழனிசாமிக்கு கொஞ்சமல்ல நிறைய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தன்னை மறந்து விடுவார்களோ என நினைத்து நாள்தோறும் மீடியா முன்பு நின்று பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்.

பத்து ஆண்டு கால ஆட்சியில் சிறந்த ஆட்சியை கொடுத்ததாகவும், ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை அவர் மறைந்த பிறகு நான்கு ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி செய்ததாக சிரிக்காமல் பேட்டி கொடுக்கிறார். பொய்க்கு மேக்கப் போட்டால் அது உண்மையாகாது. இன்னும் பளிச்சுனு அம்பலப்பட்டு போகும். தொழில் முதலீட்டார் மாநாடு நடத்தினார் பழனிசாமி 3 லட்சம் கோடி முதலீட்டை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து சேர்த்து விட்டதாக பெருமையோடு சொன்னார். நான் கேட்கிறேன் நீங்க நடத்திய முதலீட்டாளர் மாநாடு மூலமாக எவ்வளவு முதலீடு வந்தது, இதனால் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் எத்தனை பேர் இது குறித்த புள்ளி விவரத்துடன் உங்களால் சொல்ல முடியுமா?.

அரியலூர் அரசு நிகழ்ச்சியில் ஸ்டாலின்

கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன் என ஆட்சிக்கு பயந்து தமிழ்நாட்டிற்கு வந்து ஓடி போனவர்கள் பலர். திராவிட மாடல் ஆட்சியில் திரும்ப அவர்களை அழைத்து வந்து தொழில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்குகின்ற வகையில் பத்து லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளோம். புரிந்தணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுகிறோம். உடனடியாக தொழில் தொடங்க எல்லா முயற்சிகளையும் எடுக்கிறோம். இது தான் நல்லாட்சியின் அடையாளம்.

ஆனால் பழனிசாமி ஆட்சியின் நிலைமை என்ன, எப்படா ஆட்சி முடியும் என மக்கள் காத்திருந்தனர் அப்படி தான் இருந்தது அந்த ஆட்சியின் நிலைமை. திராவிட மாடல் ஆட்சி எங்களுடைய ஆட்சி. எங்களுக்கான ஆட்சி, எங்கள் வாழ்வை வளம் பெற வைக்க கூடிய ஆட்சி. எந்நாளும் தொடரும் திமுக ஆட்சி என மக்கள் விரும்பும் லட்சிய ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது. கடந்த வாரம், மேற்கு மண்டலம், சில நாட்களுக்கு முன் தென் மண்டலம், இப்போது மத்திய மண்டலம் என தமிழ்நாட்டில் மக்கள் கூட இருக்கேன். இப்ப மட்டுமல்ல கடந்த 60 ஆண்டுகளாக நான் மக்களோடு தான் இருக்கேன். தேர்தலுக்காக வருபவன் அல்ல நான். உங்களை தேவைகளை அறிந்து தீர்த்து வைப்பதற்காக எப்போதும் உடன் இருப்பவன்.

ஸ்டாலின்

இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க திராவிட மாடல் அரசு பாடுபடுகிறது. அந்த வளர்ச்சியை உறுதி செய்ய ஒவ்வொரு மாவட்டத்திலேயும் கள ஆய்வு செய்கிறோம். ஒவ்வொரு பயணத்திலும் ஒரு அனுபவம் மறக்க முடியாததாக அமைந்து விடுகிறது. கடந்த வாரம் விருதுநகரில் அன்னை சத்யா குழந்தைகள் காப்பகத்திற்கு சென்ற போது அதில் இருந்த குழந்தைகள் என் மீது காட்டிய பாசம் என்னை உருக வைத்தது. இதயத்திலிருந்து அப்பானு என்னை அவர்கள் அழைத்தது என் இதயத்தில் ஆழமாக பதிந்து விட்டது.

மூன்றாண்டு ஆட்சியில் நிதி நெருக்கடி, திட்டமிட்ட அவதூறுகள், செயற்கையாக உருவாக்கப்படும் தடைகள் என எதையும் பொருட்படுத்தாமல் எதிர்கால தமிழ்நாடு வளமான தமிழ்நாடாக இருக்க திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பல முத்தான திட்டங்களில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டமும் ஒன்று. தற்போது இதன் இரண்டாவது கட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன். மிக மிக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவன் நான் என்றார் கலைஞர். என்னை பொறுத்தவரை மிக மிக நலிந்த மக்களுக்கான ஆட்சியாக இந்த ஸ்டாலின் ஆட்சி இருக்கும். ஒரு குடும்பத்திற்கு தேவையான எல்லாவற்றையும், ஒரு தந்தையாக, உங்கள் குடும்பத்தில் ஒருத்தனாக செய்து தருகிறேன்" என்றார்.

ITC ஹோட்டல் விருந்து... களமிறக்கப்படும் பிரஜேந்திர நவ்நீத்... நிதிக்குழுவிடம் சாதிப்பாரா முதல்வர்?

வரும் நவம்பர் 17-ம் தேதியிலிருந்து, அடுத்த மூன்று நாள்களுக்கு தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறது 16-வது நிதிக்குழு. அதற்காக, டெல்லியிலிருந்து தனி விமானத்தில் குழுவின் தலைவரான அரவிந்த் பனகாரியா... மேலும் பார்க்க

`விஜய் போலதான் நானும்... 'உச்ச நடிகராக' இருக்கும்போது அரசியலுக்கு வந்தேன்' - சரத்குமார் பேச்சு!

சென்னையில் தொண்டர்களைச் சந்திக்கும் விழாவைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார் சரத்குமார். அப்போது விஜய் அரசியல் குறித்தும், பா.ஜ.க-வின் வளர்ச்சி குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.வ... மேலும் பார்க்க

Telangana: திருநங்கை தன்னார்வலர்களை போக்குவரத்து காவலில் ஈடுபடுத்த திட்டம்; ரேவந்த் ரெட்டி அறிவிப்பு

ஹைதராபாத் மாநகரில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய காவல்துறையினருக்கு உதவும் வகையில் தன்னார்வமுள்ள திருநங்கைகளை பணியமர்த்த தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.திருநங்கை தன்னார்வளர்களு... மேலும் பார்க்க

Srilanka: 'மறுமலர்ச்சியை ஆரம்பிக்க தோள் கொடுத்ததற்கு நன்றி'- அநுர குமார திசாநாயக்க அபார வெற்றி

கடந்த செப்டம்பர் 21-ம் தேதி இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது.அதில், தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று அதிபரானார். அனுராவின் தேசிய மக்கள்... மேலும் பார்க்க