அடுத்த தலைமுறை தகுதியோட தான் வர்றாங்க! - Director Shankar Interview | Game Chang...
மகரவிளைக்கையொட்டி சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகள்!
பத்தனம் திட்டை : சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் முறையில் நாளொன்றுக்கு 5,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
சபரிமலையில் வரும் 14-ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. அன்று மாலை, ஐயப்ப சுவாமிக்கு பொன் ஆபரணம் சாத்தப்பட்டு தீபாராதனை காட்டப்படுவது வழக்கம். அப்போது பொன்னம்பலமேட்டில் ஜோதி ஒளிரும். ஐயப்ப சுவாமியே ஜோதி சொரூபமாகக் காட்சியளிப்பதாக மகரஜோதியை தரிசித்து பக்தர்கள் பரவசமடைகின்றனர்.
இதனிடையே, மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பதைக் கருத்திற்கொண்டு, ஆன்லைன் முன்பதிவு மற்றும் ஸ்பாட் புக்கிங் முறைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, காவல்துறையின் அறிவுறுத்தலின்பேரில் இன்றிலிருந்து ஸ்பாட் புக்கிங் முறையில் நாளொன்றுக்கு 5,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
ஆன்லைன் முன்பதிவு முறையில், ஜன. 12 - 60,000 பக்தர்களும், ஜன. 13 - 50,000 பக்தர்களும், ஜன. 14 -மகரவிளக்கு நாளில் 40,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுவர். அதனைத் தொடர்ந்து, ஜன. 15, 16 ஆகிய நாள்களில் மேற்கண்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இந்த நிலையில், மகரவிளைக்கையொட்டி பந்தள அரண்மனையிலிருந்து தங்க ஆபரணங்கள் அடங்கிய திருவாபரணப்பெட்டி ஊர்வலம், பந்தளத்திலிருந்து வரும் 12-ஆம் தேதி பகல் 1 மணியளவில் புறப்படுகிறது. ஜன. 14-ஆம் தேதி அதிகாலை திருவாபரணப்பெட்டி நிலக்கல் கோயிலைச் சென்றடைகிறது. அதனைத்தொடர்ந்து, அன்று மாலை சபரிமலை சன்னிதானத்தைச் சென்றடைகிறது.