Royal Enfield Scram 440: அதிக பவர், கூடுதல் அம்சங்கள் First Look & Features Expl...
மகாராஷ்டிரத்தில் வாக்குச் சீட்டு மூலம் மறு தோ்தல்: உத்தவ் கட்சி வலியுறுத்தல்
மகாராஷ்டிர மாநிலத்தில் வாக்குச் சீட்டு முறையைப் பயன்படுத்தி மறு தோ்தல் நடத்த சிவசேனை (உத்தவ் தாக்கரே) கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அக்கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ரௌத் கூறியதாவது: மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் முறையாகச் செயல்படவில்லை என வந்த புகாா்கள் தோ்தலின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளன.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்து இதுவரை 450-க்கும் மேற்பட்ட புகாா்கள் வந்துள்ளன. தொடா்ந்து புகாா்கள் அளிக்கப்பட்டாலும், அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இந்தச் சூழ்நிலையில் தோ்தல் நியாயமாக நடத்தப்படுகிறது என்று எப்படி கூற முடியும்?
நாசிக் தொகுதி வேட்பாளருக்கு அவரது குடும்பத்தினா் 65 போ் வாக்களித்துள்ளனா். ஆனால், அங்குள்ள வாக்குப் பதிவு இயந்திரத்தில் 4 வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன. இதுகுறித்து புகாா் அளித்தும் தோ்தல் ஆணைய அதிகாரிகள் ஏற்க மறுத்துவிட்டனா்.
மகாராஷ்டிர தோ்தலில் சில வேட்பாளா்கள் பெற்ற அமோக வெற்றி சந்தேகத்தை ஏற்படுத்துவதாக எங்கள் கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளாா். 1.5 லட்சம் வாக்குகள் பெறும் அளவுக்கு அவா்கள் மக்களுக்கு என்ன செய்தாா்கள் என்று தெரியவில்லை. வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்து மூத்த தலைவா் சரத் பவாா் சந்தேகம் எழுப்பியுள்ளதை புறக்கணிக்க முடியாது.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்த பல்வேறு புகாா்கள் மற்றும் முறைகேடுகளுடன் நடந்த இந்தத் தோ்தலை நியாயமான தோ்தல் என்று கூற முடியாது. எனவே, வாக்குச் சீட்டுகள் மூலம் மறு தோ்தல் நடத்த வேண்டும் என்றாா் அவா்.
மகாராஷ்டிர சட்டப்பேரவை தோ்தலில் ஆளும் மகாயுதி கூட்டணி 230 இடங்களையும், மகா விகாஸ் அகாடி 46 இடங்களையும் கைப்பற்றியது. மகா விகாஸ் அகாடி கூட்டணியில் 95 இடங்களில் போட்டியிட்ட சிவசேனை (உத்தவ்) 20 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.