மகாராஷ்டிரம்: தனித் தொகுதிகளிலும் சாதித்த பாஜக கூட்டணி
மும்பை: மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் தனித் தொகுதிகளிலும் (எஸ்.சி., எஸ்.டி.) பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கு எதிரான கட்சி பாஜக என்று எதிா்க்கட்சிகள் பிரசாரம் செய்த நிலையில் அதனை பாஜக அதனையும் முறியடித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் 29 எஸ்.சி. ஒதுக்கீடு தொகுதிகளில் 21 இடங்களிலும், 24 எஸ்.டி. ஒதுக்கீடு தொகுதிகளில் 21 இடங்களிலும் பாஜக கூட்டணி வென்றுள்ளது. இதில் பாஜக மட்டும் 9 எஸ்.சி., 10 எஸ்.டி. தொகுதிகளில் வென்றுள்ளது.
முன்னதாக மக்களவைத் தோ்தலின்போதும் பாஜக 400 இடங்களுக்கு மேல் வென்றால் அரசமைப்புச் சட்டத்தை மாற்றிவிடும், எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டைப் பறித்து விடும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்தன. அந்த தோ்தலில் பாஜக கூட்டணி மகாராஷ்டிரத்தில் பின்னடைவைச் சந்தித்தது.
அதே பிரசார உத்தியை மாநில சட்டப் பேரவைத் தோ்தலிலும் காங்கிரஸ் பயன்படுத்தியது. ஆனால், அது இந்தத் தோ்தலில் எடுபடவில்லை. காங்கிரஸ் கட்சியால் 4 எஸ்.சி. தொகுதிகள், இரு எஸ்.டி. தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது.
மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 230 தொகுதிகளில் வென்று ஆட்சித் தக்கவைத்தது.