தேர்தலில் அமெரிக்காவைவிட இந்தியா மேலானது!! அமெரிக்காவை விமர்சித்த எலான்!
மகாராஷ்டிரா தேர்தல்: அமித் ஷாவுடன் நாள் முழுக்க நீண்ட பேச்சுவார்த்தை; இருந்தும் நீடிக்கும் இழுபறி!
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இத்தேர்தலில் ஆளும் மஹாயுதி மற்றும் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடியில் இன்னும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முழுமையடையவில்லை. பேசி முடிக்கப்பட்ட தொகுதிகளுக்கு மட்டும் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. பா.ஜ.க தலைமையிலான மஹாயுதி கூட்டணி கட்சிகளான சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஏற்கனவே முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன. பா.ஜ.க ஏற்கனவே 99 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில் இன்று இரண்டாவது கட்டவேட்பாளர்களை அறிவிக்கிறது. தீர்க்கப்படாமல் இருக்கும் தொகுதிகள் பிரச்னைக்கு தீர்வு காண கூட்டணி தலைவர்கள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் அஜித்பவார், பா.ஜ.க தலைவர்கள் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் சந்திரசேகர் பவன்குலே ஆகியோர் மத்திய அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்து பேசினர்.
இந்த பேச்சுவார்த்தை ஒரு நாள் முழுக்க நடந்தது. அப்படி இருந்தும் தொகுதி பங்கீட்டில் தீர்வு எட்டப்படவில்லை. 12 தொகுதிகளில் தீர்வு எட்டப்படவில்லை. பா.ஜ.க மற்றும் சிவசேனா கட்சிகள் இத்தொகுதிகளை கேட்டுக்கொண்டிருக்கின்றன. அத்தொகுதிகள் மும்பை மெட்ரோபாலிடன் பகுதிக்குள் இருக்கிறது. இத்தொகுதிகள் குறித்து இப்போதைக்கு முடிவு செய்யவேண்டாம் என்றும், வேட்பு மனுத்தாக்கல் முடியும் நாளில் இறுதி செய்து கொள்ளலாம் என்று கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இப்போது முடிவு செய்து வேட்பாளர்களை அறிவித்தால் அதிருப்தி வேட்பாளர்கள் களத்தில் குதிக்கக்கூடும் என்பதால் இப்போதைக்கு அதற்கு வேட்பாளர்களை அறிவிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளனர். பேச்சுவார்த்தையில் மூன்று கட்சிகளும் இணைந்து போட்டியிட வேண்டும் என்றும், அதிருப்தியாளர்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்றும், அதிருப்தி வேட்பாளர்களுக்கு ஆதரவு கொடுக்ககூடாது என்றும் அமித் ஷா கேட்டுக்கொண்டார். கல்யான் கிழக்கு, தானே, நவிமும்பை, முர்பாட் தொகுதிகளுக்கு பா.ஜ.க வேட்பாளர்களை அறிவித்திருப்பது குறித்து சிவசேனா தனது அதிருப்தியை தெரிவித்தது.
குவிந்த வேட்புமனுக்கள்:
நேற்று ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். அமராவதியின் திவ்சா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யசோமதி தாக்கூர் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற போது ஹரியானா காங்கிரஸ் எம்.எல்.ஏ.யும் மல்யுத்த வீராங்கணையுமான வினேஷ் போகத் தலைமையில் இரு சக்கர பேரணி நடந்தது. இதில் பேசிய வினேஷ் போகத், ``பா.ஜ.க பெண்களுக்கு மட்டுமல்லாது நாட்டின் இளைய சமுதாயத்திற்கும் அநீதி இழைத்துள்ளது. எனவே மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணி அரசை அகற்றுவது அவசியம்” என்று தெரிவித்தார். மும்பையில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே தனது பெற்றோருடன் ஊர்வலமாக சென்று ஒர்லி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். மும்ப்ரா - கல்வா தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) வேட்பாளர் ஜிதேந்திர அவாட் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற போது அவருடன் சரத்பவாரும் சென்றார்.
தானே தொகுதியில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா வேட்பாளர் அவினாஷ் ஜாதவ் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் கட்சி தலைவர் ராஜ்தாக்கரேயும் கலந்து கொண்டார். முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்வதாக இருந்தது. ஆனால் அவர் டெல்லியில் தொகுதி பங்கீடு குறித்து பேச சென்றதால் அவரால் தாக்கல் செய்ய முடியவில்லை. எனவே 28ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். நேற்று குருபுஷ்ய அமிர்த யோகமாகும். அன்றைய தினத்தில் நல்ல காரியத்தை தொடங்குவது பயனளிக்கும் என்பதால் நேற்று அதிகமான வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அடுத்து வரும் திங்கள் கிழமை மிகவும் நல்ல நாள் என்பதால் அன்றைய தினம் பெரும்பாலான வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்ய இருக்கின்றனர் என்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.