மகாராஷ்டிரா: `ஷிண்டே, அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி’ - பாஜக திட்டத்தை ஏற்க மறுக்கு சிவசேனா
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க 132 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்திருக்கிறது. ஆட்சியமைக்க 145 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. ஆளும் மஹாயுதி கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா 57 தொகுதியிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் பதவிக்காலம் இன்றோடு முடியும் சூழ்நிலையில் ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. முதல்வர் யார் என்று முடிவு செய்வதில் குழப்பம் நீடித்து வருகிறது. ஏக்நாத் ஷிண்டேயைத்தான் முதல்வராக்க வேண்டும் என்று சிவசேனா பிடிவாதமாக இருக்கிறது. ஆனால் பா.ஜ.க தலைமையோ ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோருக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதாக தெரிவித்திருக்கிறது. இதனை ஏற்க மறுத்து பீகார் மாடலை பின்பற்றி ஏக்நாத் ஷிண்டேயிக்கு முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்று சிவசேனா கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் எம்.பி.நரேஷ் மஸ்கே கூறுகையில், ''தேசிய ஜனநாயக கூட்டணி ஏக்நாத் ஷிண்டேயை முதல்வராக அறிவிக்க வேண்டும். பீகார் மாடலைப் போன்று ஏக்நாத் ஷிண்டேயிக்கு முதல்வர் பதவி கொடுக்கவேண்டும். ஏக்நாத் ஷிண்டே தலைமையில்தான் தேர்தலை சந்தித்தோம். இவ்விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜெ.பி.நட்டா ஆகியோர் விரைந்து முடிவு எடுக்கவேண்டும். அனைத்து சிவசேனாவினரும் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக வேண்டும் என்று விரும்புகின்றனர். ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தான் முக்கிய நலத்திட்டங்கள் குறித்து முடிவு எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. எனவே அவருக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது''என்றார்.
இது குறித்து ஏக்நாத் ஷிண்டேயிக்கு மிகவும் நெருக்கமான சிவசேனா தலைவர் ஒருவர் கூறுகையில், ''மக்களவை தேர்தல் முடிந்த பிறகு சட்டமன்ற தேர்தலை சந்திக்க பலசுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இப்பேச்சுவார்த்தையில் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க அதிக பட்ச தொகுதியில் போட்டியிடுவது என்றும், பா.ஜ.க அதிக தொகுதியில் வெற்றி பெற்றாலும், ஏக்நாத் ஷிண்டேயை முதல்வராக்குவது என்று முடிவு செய்யப்பட்டது'' என்றார்.
அதேசமயம் இது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க நிர்வாகி ஒருவர், ``தேர்தல் நேரத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா மும்பை வந்தபோது ஏக்நாத் ஷிண்டேயை முதல்வராக்குவோம் என்று ஒருபோதும் சொன்னது கிடையாது. முதல்வர் பதவி குறித்து பா.ஜ.க பாராளுமன்ற குழு கூடி முடிவு செய்யும் என்று தான் சொன்னார்'' என்றார். முதல்வர் பதவி குறித்து முடிவு எட்டப்படாமல் இருக்கும் நிலையில் தேவேந்திர பட்னாவிஸ் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அவர் டெல்லியில் கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து பேச இருக்கிறார். ஆனால் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக தான் டெல்லி வந்ததாக தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். ஏக்நாத் ஷிண்டேயும் டெல்லிக்கு புறப்பட்டு செல்ல இருக்கிறார்.
டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து இப்பிரசனைக்கு காண இரு தரப்பினரும் முடிவு செய்துள்ளனர். பா.ஜ.க தலைமை தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக்குவது என்பதில் உறுதியாக இருக்கிறது. இது தொடர்பான தங்களது முடிவை அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் தெரிவித்துவிட்டோம் என்றும், விரைவில் சிவசேனாவிடமும் இம்முடிவை முறைப்படி தெரிவிப்போம் என்று பா.ஜ.க தெரிவித்துள்ளது.
தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக அஜித் பவார் ஏற்கனவே ஆதரவு கொடுத்துவிட்டார். இதன் மூலம் துணை முதல்வர் பதவியை அஜித் பவார் தக்கவைத்துக்கொண்டார். சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கூடி ஏக்நாத் ஷிண்டேயை தங்களது சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். அதேசமயம் தேவேந்திர பட்னாவிஸ் 2.5 ஆண்டுகள் முதல்வராக இருந்துவிட்டு ஏக்நாத் ஷிண்டேயிக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக பேச்சு அடிபடுகிறது. 2.5 ஆண்டுகள் முதல்வர் பதவியில் இருந்துவிட்டு பா.ஜ.க தலைவர் பதவியை தேவேந்திர பட்னாவிஸ் ஏற்பார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இதனை பா.ஜ.க தலைமை இன்னும் உறுதிபடுத்தவில்லை.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...