மக்களவையில் ராகுல் - பிரியங்கா இணைந்தால் பாஜகவுக்கு உறக்கமில்லா இரவுகள்தான்: பைலட்
வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி மிகப்பெரிய வெற்றியடைவார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
வயநாட்டில் பிரியங்கா காந்தி வரலாறு காணாத வெற்றியடைவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவர் பல ஆண்டுகளாகக் காட்சியில் பணியாற்றி வருகிறார். முன்னதாக ராஜீவ் காந்திக்காக ராகுலுடன், சோனியா இணைந்து பிரசாரம் செய்தனர். இப்போது பிரியங்காவிற்காக அனைவரும் இணைந்துள்ளனர். எனவே நாடு முழுவதும் உள்ள கட்சி ஊழியர்களுடனும் பிரியங்கா இணைந்துள்ளார்.
நாடு முழுவதும் அறியும் பிரபலமான முகமாகவும், கேரளத்தில் உள்ள மக்களுக்காக மட்டுமல்லாமல், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பவராகவும் சிறந்த வழக்குரைஞராகவும் இருப்பார்.
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ராகுலுடன், பிரியங்கா சேருவது பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கடினமான நாள்களாகவும், உறக்கமில்லா இரவுகள் போன்று தான் இருக்கும் என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வயநாடு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதியிலும் வெற்றி பெற்றதையடுத்து, மலைத் தொகுதியில் இடைத்தேர்தல் தேவைப்பட்டது. வயநாடு தொகுதிக்கு 16 வேட்பாளர்கள் களத்திலிருந்தனர். பிரியங்கா காந்தியைத் தவிர, சிபிஐ(எம்) தலைமையிலான எல்டிஎஃப் கட்சியின் சத்யன் மொகேரி மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நவ்யா ஹரிதாஸ் ஆகியோர் போட்டியாளர்களாக உள்ளனர்.
வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பர் 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், நவம்பர் 23-ல் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.