Ajith: `` `GBU'பெரிய அளவில் லாபம் ஈட்டவில்லை என்றாலும்" - `மைத்ரி மூவி மேக்கர்ஸ்...
மதுரை: மேயர் இந்திராணி ராஜினாமா!
மதுரை மாநாகராட்சியில் பல கோடி ரூபாய் வரி முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசரணையை தொடங்கியது.
இந்த வழக்கில் மாநகராட்சி பில் கலெக்டர், வருவாய் உதவியாளர், முன்னாள் உதவி கமிஷனர் என 13 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு உள்ளனர். பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

5 மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் என 7 பேர் ராஜினாமா செய்திருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம்.
இதற்கிடையில், வரிவிதிப்புகுழு தலைவர் பதவியை ராஜினாமா செய்த தி.மு.க. கவுன்சிலர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன், ஒப்பந்த ஊழியர் செந்தில்பாண்டி ஆகியோர் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டனர்.
கண்ணன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மதுரை மாநகராட்சி மேயரான இந்திராணியின் கணவர் பொன்வசந்த், தி.மு.க., கவுன்சிலர்கள் 3 பேர், அ.தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் ஆகியோர் விசாரிக்கப்படவேண்டியவர்கள் என வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டனர்.
தலைமறைவாக இருந்த பொன்வசந்த் 12-ம் தேதி இரவு அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த நிலையில்தான், மேயர் பதவியை இந்திராணி ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தனது குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா செய்வதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
மதுரை மாநகராட்சியில் நடந்த முறைகேடு குறித்து தோண்டத் தோண்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளதால் இன்னும் பலர் சிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.