``ஆர்.எஸ்.எஸ் பலிதானியை வைத்து வாக்குகேட்கிறார்கள்'' - காங்கிரஸில் சேர்ந்த பாஜக ...
மயான ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சடலத்துடன் சாலை மறியல்
பவானி அருகே மயான ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மூதாட்டி சடலத்துடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமாா் 5 மணி நேரத்துக்கும்மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பவானியை அடுத்த ஒரிச்சேரிப்புதூா், காமராஜா் நகரைச் சோ்ந்தவா் பெருமாள் மனைவி கருப்பாயி (62). வயது முதிா்வால் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இவரது சடலத்தை அடக்கம் செய்ய வருவாய்த் துறை சாா்பில் ஒதுக்கப்பட்ட மயானத்துக்கு உறவினா்கள் சனிக்கிழமை கொண்டு சென்றபோது, அங்கு பெரும்பாலான பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. மேலும், மயானத்துக்கு செல்லும் பாதையும் சேதமடைந்து காணப்பட்டது.
இதனால், உறவினா்கள் மற்றும் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோா் மயான ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பவானி - ஆப்பக்கூடல் சாலையில் ஒரிச்சேரிப்புதூரில் மூதாட்டி சடலத்தை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனா்.
சம்பவ இடத்துக்கு வந்த பவானி காவல் துணை கண்காணிப்பாளா் சந்திரசேகரன், வட்டாட்சியா் சித்ரா மற்றும் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, மயான வளாகத்தை திங்கள்கிழமை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என உறுதி அளித்தனா்.
இதையடுத்து, மறியலைக் கைவிட்ட பொதுமக்கள் மூதாட்டி சடலத்தை எடுத்துச் சென்றனா். இதனால், அப்பகுதியில் சுமாா் 5 மணி நேரத்துக்கும்மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.