Ajith: `` `GBU'பெரிய அளவில் லாபம் ஈட்டவில்லை என்றாலும்" - `மைத்ரி மூவி மேக்கர்ஸ்...
மயிலாடுதுறை: விகடன் செய்தி எதிரொலி; பள்ளியில் ஆண்களுக்கு தனி கழிவறை அமைக்க நிதி ஒதுக்கிய ஆட்சியர்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரிவேளூர் ஊராட்சி பூங்குடி கிராமத்தில் 1952-ல் தொடக்கபள்ளி ஒன்று தொடங்கப்பட்டு, அன்று முதல் இன்று வரை அப்பகுதி மக்களின் தொடக்கல்வியின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
தற்போது இப்பள்ளியில் பூங்குடி மற்றும் தோப்புத்தெரு பகுதியைச் சேர்ந்த 34 மாணாக்கர்கள் கல்வி பயிலுகின்றனர். இதில் 20பேர் ஆண்கள் மற்றும் 14 பேர் பெண்கள்.
இந்த நிலையில் இப்பள்ளியில் ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் தனித்தனியே கழிவறைகள் இல்லாதது பற்றியும், அப்பள்ளி குழந்தைகளின் அசௌகரியமான மனநிலையை பற்றிய பெற்றோர்களின் வேதனைகள் குறித்தும், கடந்த 03/10/2025 இல் விகடனில் "பொம்பள புள்ளைங்க உடனே போக முடியல" - பெண்கள் கழிவறை இல்லாமல் அவதியுறும் பள்ளி மாணவிகள்" என்ற தலைப்பில் செய்தி ஒன்றை வெளியீடு செய்தோம்.
செய்தி உடனடியாக அந்த ஊர் மக்கள் கவனத்திற்கும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் நேரடி கவனத்திற்கும் சென்றது.
மேலும் அந்த செய்தியின் எதிரொலியாக தற்போது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரால் அப்பள்ளியில் ஆண்களுக்கான தனி கழிவறை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுக்குறித்து கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாக்சன் கூறியதாவது, "இச்செய்தியானது அரசு அதிகாரிகளின் மூலம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பிறகு மாவட்ட ஆட்சியர் அப்பள்ளியை ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப உத்தரவிட்டார். ஆய்வில் இருபாலருக்கும் தனித்தனி கழிவறைகள் இல்லாதது உறுதி செய்யப்பட்டது.
அறிக்கையானது மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்ட நிலையில், ஆண்களுக்கு தனி கழிவறை அமைக்க மாவட்ட ஆட்சியர் ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.5,25,000 ஒதுக்கீடு செய்துள்ளார். இன்னும் ஒரு வாரங்களில் டெண்டர் விட்டப்பட்டு கழிவறை கட்டும் பணி தொடங்கும்" என்றார்.
இதுக்குறித்து அப்பள்ளி மாணவர்களின் பெற்றோரிடம் பேசியபோது, "பாவம் சின்ன பசங்க பாத்ரூம் போறத்துக்கே ரொம்ப செரமபட்டாங்க. எங்கள்ட வந்து சொல்றப்ப எங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும்.
எங்களுக்கு தெரிஞ்சதெலாம் கிராம சபா கூட்டத்துல சொல்றது மட்டும் தான். நாங்களும் எத்தனையோ வாட்டி சொன்னோம். அதுக்கெல்லாம் இங்க பலன் இல்லாமா போயிடுச்சி. இப்ப விகடன் செய்தி வந்தது பாத்துட்டு கலெக்டர் கட்ட சொல்லி இருக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு.
நிதி ஒதுக்குன கலெக்டருக்கும், செய்தி வெளியிட்ட விகடனுக்கும் ரொம்ப நன்றி. அங்க படிக்கிற குழந்தங்களை மனசுல வச்சி தரமான முறையில கழிவறை கட்ட வேண்டும்" என்றனர்.