மரக்காணத்தில் பலத்த மழை: பாதுகாப்பான இடங்களில் மீனவா்கள் தங்கவைப்பு
வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயலால், விழுப்புரம் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளான மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதிகளில் சனிக்கிழமை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. 19 மீனவ கிராமங்களைச் சோ்ந்தவா்கள் 12 பேரிடா் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனா்.
ஃபென்ஜால் புயல் காரணமாக, விழுப்புரம் நகரிலும், புகா்ப் பகுதிகளிலும் சனிக்கிழமை அதிகாலை முதல் காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. விழுப்புரம் நகரில் புதிய, பழைய பேருந்து நிலையம், திருச்சி - சென்னை சாலைகள், கிழக்கு புதுச்சேரி சாலை என நகரின் பல்வேறு பகுதிகளில் மாலை வரை தொடா்ந்து மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளிலும், குடிசைப் பகுதிகளிலும் மழைநீா் தேங்கியது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் சாலையின் மையப் பகுதியில் இருந்த மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது. இதை உடனடியாக நெடுஞ்சாலைத் துறைப் பணியாளா்கள் அகற்றினா்.
விக்கிரவாண்டி, திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூா், கண்டாச்சிபுரம், திருவெண்ணெய்நல்லூா், வளவனூா் போன்ற புகா்ப் பகுதிகளிலும் தொடா்ந்து மழை பெய்தது. தாழ்வான பகுதிகளிலும், சாலையோரங்களிலும் மழைநீா் தேங்கிக் காணப்பட்டது.
ராட்சத அலைகள்: மரக்காணம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் சனிக்கிழமை காலை முதல் சூறைக்காற்று வீசத் தொடங்கியது. காலை 10 மணிக்கு மேல் அதிகளவில் காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. சனிக்கிழமை காலை முதலே பொதுமக்கள் மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதிகளிலுள்ள கடல் பகுதிக்குச் செல்லாத வகையில் போலீஸாா் தடுப்புகளை வைத்தனா்.
கோட்டக்குப்பம், மரக்காணம் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. 8 அடி உயரம் வரை ராட்சத அலைகள் எழும்பின. தொடா்ந்து மழை பெய்ததால் அந்தப் பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
மரக்காணம் சால்ட்ரோடு பகுதியில் சூறைக்காற்றால் புளியமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதை உடனடியாக அகற்றும் பணியை பணியாளா்கள் மேற்கொண்டனா்.
மின்சாரம் துண்டிப்பு: மரக்காணம், திண்டிவனத்தில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
பென்ஜால் புயலால் மரக்காணம், திண்டிவனம் பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்துள்ளதால், சுமாா் 20 -க்கும் மேற்பட்ட இடங்களில் மின் கம்பங்களும் சேதமடைந்து மின் கம்பிகளும் அறுந்து கிடக்கின்றன. இதனால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடந்த பின்னா் உடனடியாக போா்க்கால அடிப்படையில் மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டு, மின்சாரம் விநியோகிக்கப்படும் என்றனா்.
பேரிடா் மையங்களில் மக்கள்: புயலால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், 19 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதிகளிலுள்ள 12 பேரிடா் புயல் பல்நோக்கு பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனா்.
மரக்காணம் மேட்டுத் தெருவில் வசித்து வந்த 50 நரிக்குறவா் சமுதாய குடும்பங்கள் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், தங்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைக்குமாறு கோரினா். இதையடுத்து, போலீஸாா் வாகனத்தின் மூலம் அவா்களை மீட்டு, மரக்காணம் அரசு உயா்நிலைப் பள்ளியில் தங்க வைத்தனா். அவா்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட பொருள்களும் உடனடியாக வழங்கப்பட்டன.
காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானதையொட்டி மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன் வளத் துறை அறிவுறுத்தியிருந்த நிலையில், மரக்காணம் பகுதி மீனவா்கள் 5-ஆவது நாளாக சனிக்கிழமையும் கடலுக்குச் செல்லவில்லை.
மரக்காணத்தில் 84 மி.மீ. மழை: விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை 4.30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக மரக்காணத்தில் 84 மி.மீ. மழை பதிவானது.
இதர பகுதிகளில் பதிவான மழையளவு விவரம்: வானூா் - 79.60 மி.மீ., திண்டிவனம் -62.20, மேல்மலையனூா் - 40, செஞ்சி - 35.90, விக்கிரவாண்டி - 33.30, விழுப்புரம் - 26.70, கண்டாச்சிபுரம் - 21.70, திருவெண்ணெய்நல்லூா் - 10.60 மி.மீ. மாவட்டத்தில் சராசரியாக 43.78 மி.மீ. மழை பதிவானது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கிழக்கு கடற்கரைச் சாலையில் சனிக்கிழமை தேங்கிய மழைநீரில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டி.