மர்மதேசமாகும் மகாராஷ்டிரம்: முதல்வராகாவிட்டால் ஷிண்டேவின் பிளான் பி?
மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்பது எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் நிலையில், தன்னை முதல்வராக தேர்ந்தெடுக்காவிட்டால், பிளான் பி ஒன்றை முதல்வர் பொறுப்பில் இருக்கும் ஏக்நாத் ஷிண்டே வைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தன்னை முதல்வராக தேர்வு செய்யாவிட்டால், மாநில உள்துறை அமைச்சர் பொறுப்பை வழங்க வேண்டும் என்று கேட்டிருப்பதாகவும் தெரிகிறது.
நேற்று இரவு, பாஜக மாநில தலைவர் தேவேந்திர பட்னவீஸ் உடன் நடைபெற்ற நான்காவது கூட்டத்தில் இதனை ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
மாற்றி யோசிக்கும் பாஜக
மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக வென்றோமா, ஆட்சியைப் பிடித்தோமா? அடாவடி செய்து முதல்வர் பதவியை வகித்தோமா என அவசரம் காட்டாமல், பாஜக மாற்றி யோசித்து வருகிறது.
கூட்டணி அரசில் இடம்பெறும் கட்சிகளுக்கான துறைகள் பகிா்வை இறுதி செய்து, அவர்களது மனங்கள் குளிர்ந்த பிறகே புதிய முதல்வரை அறிவிக்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மகாராஷ்டிரத்தில் கூட்டணிக்கு வலுவான பெரும்பான்மை கிடைத்துவிட்டது. எனவே ஆட்சியமைப்பதில் எந்த அவசரமும் இல்லை. தற்போதைய முன்னுரிமை, கூட்டணிக் கட்சிகளின் மகிழ்ச்சிதான். புதிய அரசை அமைப்பதற்கான விரிவான செயல்திட்டத்தை வகுத்து, கூட்டணி கட்சிகளுக்கான துறைகள் பகிா்வை இறுதி செய்து, கூட்டணியில் எந்த விரிசலும், உரசலும் ஏற்படாமல் கவனமான அணுகுமுறையை பாஜக கையாண்டு வருகிறது. இந்த அரசியல் பார்வைதான் இன்று மகாராஷ்டிர மாநிலத்தில் தனது தலைமையிலான அரசை ஏற்படுத்தவும் காரணமாக இருந்திருக்கிறது என்பது அரசியல் பார்வையாளர்களுக்குத் தெரியும்.
இழுபறியா.. அரசியல் பார்வையா?
நடந்து முடிந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில் வலுவான பெரும்பான்மையுடன் பாஜக கூட்டணி வென்றிருந்த நிலையிலும் அடுத்த முதல்வா் யார் என்பதில் இதுவரை கருத்தொற்றுமை எட்டப்படவில்லை.
கடந்த 23-ஆம் தேதி தோ்தல் முடிவுகள் வெளியான நிலையில், புதிய முதல்வரை அறிவிப்பதில் இழுபறி நீடிப்பதாகவே தெரிகிறது.
இந்தநிலையில்தான், மகாராஷ்டிர முதல்வரும் சிவசேனை கட்சித் தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனை செவ்வாய்க்கிழமை சந்தித்து, தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார். அதனை ஏற்றுக் கொண்ட ஆளுநா், புதிய முதல்வா் பதவியேற்கும் வரை பொறுப்பு முதல்வராக நீடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் பேரவையில் மொத்தம் 288 தொகுதிகளில் பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது. இக்கூட்டணியில் 132 இடங்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 57 இடங்களையும், அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களையும் வென்று கூட்டணிக்கு பலம் சேர்த்தன.
இதற்கிடையே ஷிண்டே முதல்வராக நீடிக்க வேண்டி, மாநிலம் முழுவதும் பல்வேறு கோயில்களில் அவரது கட்சியினா் வழிபாடு நடத்தி வருகின்றனா்.
ஆனால், நடக்கும் விவகாரங்களை எல்லாம் பார்த்த ஏக்நாத் ஷிண்டேவோ, பதவியில் நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மும்பையில் உள்ள தனது அதிகாரபூா்வ இல்லத்திலோ அல்லது வேறு இடங்களிலோ கட்சியினா் திரள வேண்டாம் என்று எக்ஸ் வலைதளத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஃபட்னவீஸ் முதல்வராவாரா?
மகாராஷ்டிர முதல்வராக பாஜக மூத்த தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸ் தோ்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக தொடக்கம் முதலே கூறப்படுகிறது. முதல்வராக ஃபட்னவீஸை ஏற்பதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தெரிவித்துவிட்டது. அடுத்தடுத்த கூட்டங்களில் ஏக்நாத் ஷிண்டேவும் மனம்மாற வாய்ப்புகள் உருவாகியிருப்பதாகவே தகவல்கள் கூறுகின்றன. நாகபுரியின் பிராமண சமூகத்தைச் சோ்ந்தவா் ஃபட்னவீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.