மாதக் கடைசியிலும் பாக்கெட்டில் பணம் இருக்க வேண்டுமா? - இதை ஃபாலோ பண்ணுங்க!
'ஒண்ணாம் தேதி சம்பளம் வருது... பத்தாம் தேதியே கையில ஒண்ணும் மிஞ்சறது இல்ல' என்ற நிலை தான் இன்று பலருக்கும் உள்ளது. இதற்கு, பிளானிங் இல்லாதது தான் முக்கிய காரணம். பிளான் சரியாக செய்து...அதை நடைமுறைப்படுத்தினாலே, அடுத்த சம்பளம் வரை நீங்கள் பணம் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கலாம். அதற்கான கைட் இதோ...
சம்பளம் கைக்கு வந்த உடன் நீங்கள் முதன்முதலில் செய்ய வேண்டியது சேமிப்பிற்கு பணம் ஒதுக்குவது தான். சேமிப்பு என்பது மிக மிக முக்கியம். இந்த சேமிப்பை நீங்கள் முதலீடாக கூட செய்யலாம். எல்லா செலவையும் முடித்துவிட்டு, சேமிப்பிற்கு பணம் ஒதுக்கலாம் என்று நினைத்தால், கடைசி வரை அது முடியாமல் போக வாய்ப்புகள் அதிகம். அதனால், சம்பளம் வந்த உடன் சேமிப்பிற்கு காசை ஒதுக்கிவிடுங்கள்.
சேமிப்பிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க காரணம், அது தான் நம்மை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்போகிறது. ஆம், எதாவது ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டாலோ அல்லது எதிர்காலத்தில் வேறு எதாவது பிளான் இருந்தாலோ, இந்தச் சேமிப்பு தான் நமக்கு கைக்கொடுக்கும்.
அடுத்ததாக, வீட்டு வாடகை, இ.எம்.ஐ, ஸ்கூல் ஃபீஸ், மளிகை சாமான்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான பணத்தை என்வலப் சிஸ்டத்தின் படி எடுத்துகொள்ளுங்கள். என்வலப் சிஸ்டம் என்றால் மாதத் தொடக்கத்திலேயே 'இதற்கு இவ்வளவு தேவை' என்று இதற்கு முந்தைய மாத செலவுகளை வைத்து கணக்கு பார்த்து பிரித்துகொள்ளுங்கள். 'ஏன் இப்படி பிரிக்க வேண்டும்?' என்ற கேள்வி எழலாம். இப்படி பிரிக்கும்போது, நாம் குறிப்பிட்ட பட்ஜெட்டிற்கு மேல் செலவு செய்யமாட்டோம். மேலும், இப்படி பிரிக்காமல் இருக்கும்போது, இன்னும் காசு இருக்கிறது என்று எதாவது ஒன்றிற்கு அதிக செலவு செய்துவிட்டு, இன்னொரு விஷயத்திற்கு காசு இல்லாமல் மாட்டிக்கொள்வோம். இதை தவிர்க்க, என்வலப் சிஸ்டத்தை பயன்படுத்தலாம்.
கடைசியாக, மீதி இருக்கும் பணத்தில் தான் அத்தியாவசியம் இல்லாத தேவைகள் மற்றும் ஆடம்பரத்திற்கு செலவு செய்யலாம். ரீல்ஸ், ஸ்டோரி, போஸ்ட் என பலவற்றை பார்த்து பல ஆசைகள் நமக்கு எழலாம். ஆனால், அது கட்டாயம் நமக்கு தேவையா என்று ஒன்றுக்கு பல தடவை யோசித்து செலவிடுவது தான் நல்லது.
மேலே, 'பிளானிங்' முக்கியம் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆம், பிளானிங் மிக முக்கியம் தான். அதை விட, பிளானிங்கை செயல்படுத்துவது தான் மிக மிக முக்கியம். பலர் பக்காவாக பிளான் போட்டுவிட்டு, அதை செயல்படுத்துவதில் கோட்டை விட்டுவிடுவார்கள். அப்படி செய்தால், பிளான் செய்ததே அர்த்தம் இல்லாமல் ஆகிவிடும். அதனால், பிளானை சரியாக நடைமுறைப்படுத்துவது மிக முக்கியம்.