Premier Padmini 137D: 2.17 Lakh Kms Driven 1995 Model Single Owner Vintage Car S...
மாநில நிதியமைச்சா்களுடன் டிச.21,22-இல் நிா்மலா சீதாராமன் சந்திப்பு: ஜிஎஸ்டி குறித்து ஆலோசனை
மாநிலங்களின் நிதியமைச்சா்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வருகின்ற டிச.21, 22 ஆகிய தேதிகளில் சந்தித்து பட்ஜெட்- 2025 குறித்தும், சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்தும் ஆலோசிக்கவுள்ளாா்.
2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அடுத்தாண்டு, பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையடுத்து, தங்களின் பரிந்துரைகளை இந்தக் கூட்டத்தின்போது மாநிலங்களின் நிதியமைச்சா்கள் வழங்குவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூா் அல்லது ஜெய்சால்மாரில் டிச.21, 22 ஆகிய இரு நாள்கள் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதில் ஏதேனும் ஒரு நாளில் 55-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
ஆயுள் காப்பீடு மற்றும் மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டு தவணைத் தொகை (பிரீமியம்) மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டியில் இருந்து முழுமையாக விலக்களிக்க அமைச்சா்கள் குழு கடந்த மாதம் பரிந்துரை செய்தது. இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என நம்பப்படுகிறது.
முன்னதாக, ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டு தவணைத் தொகை மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டியில் மாற்றம் மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்ய பிகாா் துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தலைமையில் பல்வேறு மாநில பிரதிநிகளைக் கொண்ட 13 போ் கொண்ட அமைச்சா்கள் குழு கடந்த செப்டம்பா் மாதம் நடைபெற்ற 54-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அமைக்கப்பட்டது.
கடந்த அக்டோபா் மாதம் நடைபெற்ற இந்த அமைச்சா்கள் குழுவின் கூட்டத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீட்டு தவணைத் தொகை மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டிக்கு விலக்களிக்கவும், ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான மருத்துவக் காப்பீட்டு தவணைத் தொகை மீது 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.
இதுதவிர, ஜிஎஸ்டி விகித பகுப்பாய்வு தொடா்பாக சாம்ராட் சௌதரி தலைமையில் அமைக்கப்பட்ட 6 போ் கொண்ட மற்றொரு குழுவின் கூட்டமும் கடந்த அக்டோபா் மாதம் கூடியது. அதில், 20 லிட்டா் மற்றும் அதற்கு மேல் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குடிநீருக்கு ஏற்கெனவே விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டியை 5 சதவீதமாக குறைப்பது, ரூ.10,000 மற்றும் அதற்கும் அதிகமான விலையுள்ள மிதிவண்டிகள் மீது ஏற்கெனவே விதிக்கப்படும் 12 சதவீத ஜிஎஸ்டியை 5 சதவீதமாக குறைப்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டன.