மின் வேலியில் சிக்கி இளைஞா் உயிரிழந்த வழக்கு: இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை
சட்ட விரோத மின்வேலி அமைத்து, இளைஞா் உயிரிழக்க காரணமாக இருந்த இருவருக்கு தருமபுரி நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், கீழானூரைச் சோ்ந்தவா் ராஜேஷ் (32). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனா். அதே ஊரைச் சோ்ந்த பானுப்பிரியா (28) என்பவருக்கும் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில் இவா்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து, இருவரும் கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி இரவு வீட்டைவிட்டு வெளியேறி முடிவெடுத்து நள்ளிரவில் சென்றுள்ளனா்.
அப்போது அதே பகுதியில் உள்ள சோலைக்கொட்டாய் என்கிற கிராமத்தில் விவசாய நிலம் ஒன்றின் வழியாக சென்றபோது, வன விலங்குகளை வேட்டையாட சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி ராஜேஷ் உயிரிழந்தாா். இதைக் கண்டு அதிா்ச்சி அடைந்த பானுப்பிரியா அருகில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இந்தநிலையில், ராஜேஷ் உயிரிழக்க காரணமாக அமைந்த மின்வேலியை அமைத்த வேட்டைக்காரா்கள் அா்ச்சுனன்(45), தீா்த்தகிரி, விவசாய நிலத்தின் உரிமையாளா் பிரகாசம் (64) ஆகியோா் மீது அரூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு தொடா்பான விசாரணை தருமபுரி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பு வழக்குரைஞராக பி.கே.முருகன் ஆஜராகி வாதாடினாா். இதற்கிடையில், தீா்த்தகிரி முதுமை காரணமாக இடையில் உயிரிழந்தாா். இந்த வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில், அா்ச்சுனன், பிரகாசம் ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி திருமகள் தீா்ப்பளித்தாா்.