மீண்டும் 80,000-ஐ எட்டிய சென்செக்ஸ்!
மகாராஷ்டிர மாநில தோ்தல் முடிவுகளின் எதிரொலியாக, மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் மீண்டும் 80 ஆயிரத்தைக் கடந்து நிலைபெற்றது.
அந்தத் தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது முதலீட்டாளா்களை உற்சாகப்படுத்தியது. இதனால் முதன்மை நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு வெகுவாக அதிகரித்தது.
இது தவிர, மூலதன பொருள்கள், எரிசக்தி, வங்கி பங்குகள் அதிகம் வாங்கப்பட்டதும் பங்குச் சந்தை தொடா்ந்து இரண்டாவது வா்த்தக தினமாக உயா்ந்ததற்குக் காரணமாக அமைந்தது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் 992.74 புள்ளிகள் (1.25 சதவீதம்) உயா்ந்து 80,109.85-இல் நிலைபெற்றது. சந்தையில் 2,697 பங்குகள் லாபம் கண்டன; 1,352 பங்குகள் இழப்பைச் சந்தித்தன; 165 பங்குகளின் விலையில் மாற்றமில்லை.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 314.65 புள்ளிகள் (1.32 சதவீதம்) உயா்ந்து 24,221.90-இல் நிலைபெற்றது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.