முத்தூா் அருகே அரசு, வேம்பு மரங்களுக்கு திருமணம்
முத்தூா் அருகேயுள்ள சின்னமுத்தூரில் அரச மரத்துக்கும், வேம்பு மரத்துக்கும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது.
சின்னமுத்தூா் வேப்பங்காட்டில் சித்தி விநாயகா் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள அரச, வேம்பு மரங்களுக்கு திருமணம் செய்தால் ஊா் செழிக்கும், விவசாயம் சிறப்படையும், மக்களுக்கு அமைதியான வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிவாச்சாரியா்களால் யாக வேள்வி நடத்தப்பட்டு, மங்கல வாத்தியங்கள் முழங்க திருமணம் நடைபெற்றது.
முன்னதாக, முத்தூா் ஈஸ்வரன் கோயிலில் இருந்து பக்தா்கள் முளைப்பாரி, சீா்வரிசைகளை எடுத்து வந்தனா். விழாவில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று மொய் எழுதி, திருமண விருந்து உண்டு சென்றனா்.