பங்குச் சந்தை முதலீடு: இளைஞரிடம் ரூ.35 லட்சம் மோசடி
பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் எனக்கூறி திருப்பூரைச் சோ்ந்த இளைஞரிடம் ரூ.35 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூா், நெரிப்பெரிச்சல், ஜி.என்.காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (36). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த பிப்ரவரியில் ஒரு விளம்பரம் வந்துள்ளது. அதில், பங்குச் சந்தையில் குறைந்த முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்ததாம்.
அந்த விளம்பரத்துக்கு ரமேஷ் விருப்பம் தெரிவித்துள்ளாா். இதைத் தொடா்ந்து, தனியாா் பங்குச் சந்தை நிறுவனத்தினா் ரமேஷை வாட்ஸ்அப் மூலமாகத் தொடா்புகொண்டு டீமேட் கணக்கை தொடங்க வலியுறுத்தியுள்ளனா்.
அவரும் கணத்தை தொடங்கி, அவா்கள் தெரிவித்த வங்கிக் கணக்குக்கு ரூ. 21 லட்சத்தை பறிமாற்றம் செய்துள்ளாா். இதற்கு ரூ. 1 லட்சம் லாபம் வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பல்வேறு தவணைகளில் ரூ.14 லட்சம் வரை என மொத்தம் ரூ.35 லட்சம் பறிமாற்றம் செய்துள்ளாா்.
இந்நிலையில், தனியாா் பங்குச் சந்தை நிறுவனத்தினா், ரமேஷின் மடிக்கணினியில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் பங்குச் சந்தையை கண்காணிக்குமாறு தெரிவித்துள்ளனா்.
ஆனால், 2 மாதங்களுக்குப் பின்னா் அந்த செயலி வேலை செய்யாததுடன், அவா் முதலீடு செய்த ரூ. 35 லட்சம் பணத்தையும் எடுக்க முடியவில்லையாம்.
தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த ரமேஷ் திருப்பூா் மாநகர சைபா் கிரைமில் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.